இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணை 4 டி.எம்.சி நீர் கொள்ளளவு கொண்டது. இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 50000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக கூட்டுக் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு பட்டிசேரி எனும் இடத்தில், பாம்பாற்றுக்கு வரும் தண்ணீரை மறித்து பட்டிசேரி அணையை கட்டியது. அதற்கு தமிழகத்தில் அனைத்துகட்சியினரும் கடும் ஆட்சேபனை தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அடுத்த அதிர்ச்சியாக, இடுக்கி மாவட்டம் பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதியாகும். இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்படுவர். இதனையடுத்து இம்முயற்சிக்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கேரள அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது;
”தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.
மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனியாவது தி.மு.க அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.
தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் திரு. @mkstalin அவர்களின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது.…
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) May 19, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.