டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றது. தமிழக சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பயணம் கூட்டணி தொடர்பானதாக இருக்கலாமோ என்ற கேள்வியும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்தது.
இதற்கிடையில், டெல்லியில் புதிய அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி சென்றதாக கூறப்பட்டது. இருப்பினும், பா.ஜ.க.,வைச் சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளதாகவும், அப்போது அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி குறித்து பேசப்படலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், டெல்லியில் அமித் ஷா வீட்டிற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, அவரை சந்தித்து பேசினார். அப்போது அமித் ஷாவுக்கு எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து, சால்வையும் போர்த்தினார். இதனை தொடர்ந்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சந்திப்பின் போது தம்பிதுரை, கே.பி.முனுசாமி, சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோரும் உடன் இருந்தனர்.