Advertisment

அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கேட்டதே தி.மு.க அரசு தான்; ஸ்டாலின் நாடகமாடுகிறார் – இ.பி.எஸ்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க கூட்டணிக் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால்தான் அந்த கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியே வருவதில்லை -எடப்பாடி பழனிசாமி

author-image
WebDesk
New Update
Edappadi Palaniswami

மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க முதலில் அனுமதி கேட்டு கடிதம் எழுதிவிட்டு, தற்போது திட்டத்தை ரத்து செய்ய கடிதம் எழுதி முதலமைச்சர் ஸ்டாலின் நாடகமாடி வருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குறை கூறியிருக்கிறார்.

Advertisment

சேலம் மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் உடனான கள ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் நாய்க்கன்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதித்ததாக அந்தப் பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சுரங்கம் அமைத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சுரங்கம் அமைக்க தி.மு.க அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதி முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கிறது. இதுகுறித்து தி.மு.க அரசாங்கம் கண்டு கொள்வதே இல்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.

ஜி.எஸ்.டி வரி வாடகைக் கட்டடங்களுக்கு 18  சதவீதம் வசூலிக்கப்படுவதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க அரசு, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, இதற்குண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் மத்திய- மாநில அரசுகள் வரிமேல் வரி போடக்கூடாது.

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த விவசாயிகளுக்கு தி.மு.க அரசு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.

அ.தி.மு.க அரசு இருக்கும் வரை சொத்து வரி ஏறாமல் பார்த்துக் கொண்டோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க ஆட்சியில் சொத்து வரியை அதிகளவில் ஏற்றி விட்டு எங்கள் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் தி.மு.க அரசு சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தாது ஏன்? ஆட்சி அதிகாரம் அவர்களிடத்தில் உள்ளது. எங்களிடத்தில் பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை தி.மு.க ஏன் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்து விட்டு தற்போது உயர்த்தி வருகிறார்கள். பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்ததால் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வருவதற்காக எதாவது பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, தற்போது சாக்கு போக்குகளை சொல்லி வருகிறார்கள்.

வேளாண் பாதுகாப்பு மண்டலம் மாநிலப் பட்டியலில் வருகிறது. 2006-2011 தி.மு.க ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தி ரத்து செய்து அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுத்தது. சட்ட ஆலோசகர்களை ஆலோசித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஆளுநர் வாயிலாக சட்டம் ஆக்கியுள்ளோம். அப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் கடிதம் நேரில் வழங்கப்பட்டது. வேளாண்துறை மாநில பட்டியலில் வருவதால் மாநில அரசே சட்டம் இயற்றலாம் என அப்போதைய மத்திய அமைச்சர் கூறிவிட்டார். அதன்பிறகே டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தி.மு.க அரசு முன்வர வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. 152 அடியாக உயர்த்திடும் வகையில் அணையின் உறுதித்தன்மையை ஆராய குழு அமைக்கப்பட்டது. அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு அ.தி.மு.க ஆட்சியின் போது கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர் கூட்டணிக்கு வருபவர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தி.மு.க கொடுத்ததைத்தான் அவர் சொல்கிறார். எங்களிடம் எப்படி அவர்கள் வருவார்கள். தி.மு.க.,தான் கோடிக்கணக்கான பணத்தை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறது. 10 கோடி 15 கோடி கொடுக்கும் போது அவர்கள் எங்களிடம் எப்படி வருவார்கள் என்ற பொருள்படியே திண்டுக்கல் சீனிவாசன் பேசினார் என்றார்.

அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டங்கள் கலவரக் கூட்டங்களாக நடப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். இப்போதுதான் வந்திருக்கிறார். கலவரக் கூட்டம் தி.மு.க.,வில் தான் நடந்தது. அதை அவர் மறந்து பேசுகிறார். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். அது புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றபோது அடித்து உதைத்தனர். அதுதான் கலவரம். அவர்களுடைய கட்சிதான் கலவரக் கட்சி.

அ.தி.மு.க ஆரோக்கியமான கட்சி. தி.மு.க போல அடிமையான கட்சி இல்லை. சுதந்திரமாக செயல்படுகிற கட்சி. வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்கு உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் பதவிக்கு வரலாம். அ.தி.மு.க கூட்டத்தில் கருத்து சுதந்திரம் உள்ளது. கருத்துக்களை பரிமாறி நல்ல ஆலோசனைகளை பெற்று வருகிறோம். தி.மு.க போல விருந்து போட்டு செல்லும் கூட்டம் எங்களுடையது இல்லை என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேட்டியின் போது அ.தி.மு.க அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடாசலம், மாநிலங்களை உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Edappadi Palanisamy Admk Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment