ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 30 ஆம் தேதி தனியார் பேருந்து கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் மரணம் அடைந்தனர். மேலும் சுமார் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் ஏற்காட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி, “பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை அதிகாரிகள் முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
தி.மு.க. அரசு 2021-2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 5,000 புதிய பேருந்துகள் வாங்குவதாக அறிவித்தனர். 2022-23 ஆண்டில் 1000 பேருந்துகள் வாங்குவதாக அறிவித்தனர். எனக்கு தெரிந்து 400 முதல் 500 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 14,500 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டன. அரசு பேருந்துகள் பழுதடைந்து விட்டது. அரசு பேருந்துகளில் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். சில நேரங்களில் மழைக்காலங்களில் பேருந்தில் ஒழுகுகிறது.
வறட்சியின் காரணமாக பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். ஆனால் இந்த அரசு மதுபான வருமானத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து இருந்தாலே தற்போது கோடை காலத்தில் அந்த நீரை பயன்படுத்தி இருக்கலாம். வறட்சியான நேரத்தில் முதலமைச்சர் ஓய்வு எடுப்பதற்கு செல்வதா?
ரகசிய பயணம் எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா சென்றிருந்தேன். அதிக நேரம் நிற்பதால் குதிகாலில் வலி ஏற்பட்டது." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“