Advertisment

2026 தேர்தலுக்கு பாடமும் படிப்பினையும் கிடைத்திருக்கிறது: மக்களவைத் தேர்தல் முடிவு பற்றி இ.பி.எஸ் அறிக்கை

தனித்து நின்றோம்; கொள்கைகளாக வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம்; 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் – அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை

author-image
WebDesk
New Update
EPS

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையைத் தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' 
நெடிய அரசியல் பயணத்தில் வெயிலும், நிழலும் கொள்கைப் போராளிகளுக்கு சமமே! வீழ்த்த முடியாத மக்கள் பேரியக்கம் அ.தி.மு.க என்பது மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் நாம் எதிர்பார்த்தது போலவே அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரச்சார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு சாதகமாக வந்திருக்கின்றன. 

தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாக பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, அ.இ.அ.தி.மு.க வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். 

'பொன்மனச் செம்மல்' எம்.ஜி.ஆர், "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்று தவவாழ்வு வாழ்ந்த ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கி, கட்டிக்காத்து, வழிநடத்திய அ.தி.மு.க.,வை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சியையும், சூதுகளையும் மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்ட கழகத் தொண்டர்களின் அன்புக் கட்டளைகள் ஏற்பவே! "கொள்கைக்காக வாழ்வோம்; எது வந்தாலும் ஏற்போம்" என்று இந்தத் தேர்தலில் களம் இறங்கியது அ.தி.மு.க.

'கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது' - காட்டிலே ஓடும் முயலைக் குறி தவறாது கொன்ற அம்பைவிட, யானையின் மேல் குறி வைத்து தவறிப்போன வேலைத் தாங்குதல் வீரனுக்கு அழகாகும் என்ற திருவள்ளுவரின் பொது வாழ்வு இலக்கணத்திற்கு ஏற்ப, இந்தத் தேர்தலை கனநேர சிறிய வெற்றிக்காக அல்லாமல், ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காகத் துணிவுடன் எதிர்கொண்டது அ.தி.மு.க. தனித்து நின்றோம்; கொள்கைகளாக வீரர்களாக தலை நிமிர்ந்து நிற்கிறோம்.

அ.தி.மு.க அதிகார பலம் படைத்தவர்களின் நிழலில், மக்கள் நலனையும், மாநிலத்தின் பெருமையையும் இழக்காமல், பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையைத் தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.

"இனி அ.தி.மு.க அவ்வளவுதான்" என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும்; 1996 சட்டமன்றத் தேர்தலின்போதும்; ஏன் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும், நம் கதை முடிந்ததாக ஆருடம் கூறி ஆனந்தப்பட்டவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை கழக உடன்பிறப்புகளுக்கு உண்டு. 2021 சட்டமன்றத் தேர்தலில் கழக கூட்டணி 75 இடங்களைப் பெற்று நாம் யார் என்பதை உலகுக்குக் காட்டினோம்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.

எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், இதுநாள்வரை அ.தி.மு.க மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலின்போது அல்லும், பகலும் அயராது உழைத்த கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்களின் திருப்பாதம் பணிகிறேன். 'உங்கள் உழைப்புக்கும், தியாகத்திற்கும் என்ன கைமாறு செய்யப்போகிறேன்' என்று கண் கலங்குகிறேன். இன்னும் தீவிரமாகவும், தீர்க்கமாகவும் பணியாற்றி, நீங்கள் தலைநிமிர்ந்து வெற்றி நடை போட உறுதி ஏற்கிறேன். உங்கள் ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றியை பாசத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.

“எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே உன்னை இடரவைத்து, தள்ளப் பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையடா - நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா! சத்தியமே லட்சியமாய் கொள்ளடா" என்ற புரட்சித் தலைவரின் பாடல் நமக்கு என்றைக்கும் வழிகாட்டும். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aiadmk Edappadi Palanisamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment