Advertisment

காவிரி பிரச்னையில் கும்பகர்ணன் போல தி.மு.க அரசு தூக்கம்; உடனே அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை: இ.பி.எஸ்

கர்நாடகாவில் தங்கள் குடும்ப நபர்கள் நடத்தும் தொழில்கள் பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதைத் தவிர்த்து, தி.மு.க அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்; எடப்பாடி பழனிச்சாமி

author-image
WebDesk
New Update
EPS at Madurai

காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதைத் தவிர்த்து, தி.மு.க அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்; எடப்பாடி பழனிச்சாமி

காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தன் ஆட்சியின் பெருமையை பறைசாற்றும் விதமாக, காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ஆம் தேதி முன்யோசனையின்றி தண்ணீரைத் திறந்துவிட்டார் தி.மு.க அரசின் பொம்மை முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், தி.மு.க அரசின் பேச்சை நம்பி, காவிரி டெல்டா பாசனப் பகுதியில் குறுவை சாகுபடிக்கு சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தங்கள் கையில் இருந்த பணம், நகை, விதை நெல், வங்கி கடன் மற்றும் உடல் உழைப்பையும் மூலதனமாக்கி, 5 லட்சம் ஏக்கர் பாசனப் பகுதிகளில் குறுவை சாகுபடியைத் தொடங்கினார்கள்.

ஆனால், நடந்தது என்ன? குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீரின்றி 3.50 லட்சம் ஏக்கர் நெற்பயிர் கருகியது. மீதமுள்ள 1.5 லட்சம் ஏக்கரில் கிணற்றுப் பாசன உதவியோடு விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர்.

நிர்வாகத் திறனற்ற தி.மு.க அரசு என்ன செய்திருக்க வேண்டும்? ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்தவுடன், மேட்டூர் அணையில் நமது கைவசம் இருக்கக்கூடிய தண்ணீர் முழுவதையும் திறந்துவிடுவதைக் குறைத்து, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம் தீர்ப்பின்படி, கர்நாடக அரசு தமிழகத்துக்குத் தர வேண்டிய ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பங்கு நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் பெற்றிருக்க வேண்டும்.

திமுக அரசு கும்ப கர்ணன் போல் தூங்கிவிட்டு, மேட்டூர் அணையில் இருந்த நீரையெல்லாம் காலி செய்தபின், பெயருக்கு மத்திய அரசை காரணம் காட்டி காலதாமதம் செய்ததைத் தவிர, காவிரி நீர்ப் பிரச்சனைக்கு எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப்போடவில்லை.

டெல்டா விவசாயிகள் உள்ளிட்ட தமிழக மக்கள் மீது அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அக்கறை இருந்திருந்தால், கடந்த ஜூன் மாதம், கர்நாடகாவில் தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டபோது, ​​அணைகளில் தண்ணீர் அதிகமாக இருந்த சமயத்தில், அவர்களுடன் நட்பாகப் பேசி காவிரியில் தண்ணீரை திறந்துவிடச் செய்திருக்கலாம்.

இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, ​​டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, தன் மாநில மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிக்க சம்மதித்ததோ, அதேபோன்று, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்து விட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம்.

காவிரி டெல்டா பகுதி நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி, நிலங்கள் பாலைவனமான நிலையில், இண்டியா (I.N.D.I.A.) கூட்டணியின் சார்பில் பெங்களூருவில் கூட்டிய கூட்டத்துக்கு வரமாட்டேன்! எனவும், என் மாநில மக்கள் நலனே முக்கியம் எனவும், “நானும் ஒரு டெல்டாகாரன்தான்எனவும் தெரிவித்து, ஸ்டாலின் பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்.

அதை விட்டுவிட்டு, தும்பைவிட்டு வாலை பிடிப்பதுபோல், இதை எதையும் செய்யாமல் ஒன்றிய அரசு என வாய் வீரம் காட்டிவிட்டு, மத்திய அரசின் பின்னால் ஓடி ஒளிந்துகொண்டு, தமிழக மக்களை வஞ்சிப்பது ஏற்கத்தக்கதல்ல.

கர்நாடகாவில் தங்கள் குடும்ப நபர்கள் நடத்தும் தொழில்கள் பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில், காவிரி பிரச்சினையில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதைத் தவிர்த்து, தி.மு.க அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்.

விவசாயிகள் மீது இனிமேலாவது அக்கறை கொண்டு, காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, தமிழக மக்களின் உரிமையைக் காத்திட, காவிரி நீரை விரைந்து பெற்றிட, ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று இந்த தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்." இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Edappadi K Palaniswami Cauvery Issue
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment