போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி அரசு மருத்துவமனையில் இன்று காலை திடீரென போதையில் ஒருவர் புகுந்து அங்கிருந்த இருகைகளை தூக்கி வீசியும், அங்கும் இங்கும் கத்திக்கொண்டும் அவர் ஓடியதால் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை கவனித்து வந்த உறவினர்கள் அச்சமடைந்ததனர். மேலும், அப்போது மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவிட்டனர்.
உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விரைந்து வந்து போதையில் அவசர சிகிச்சை பிரிவில் சூறையாடிய நபரை கைது செய்தனர். அவரிடம் போதை இறங்கியவுடன் விசாரணை நடத்த இருப்பதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ரகளையில் ஈடுபட்டவர் மன்னார்குடி விழல்காரதெரு பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவதும், அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ஒருவரின் அட்டகாசத்தால் மருத்துவப் பணியாளர்களும் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளானதாக வரும் செய்தி கவலையளிக்கின்றது.
போதைபொருள் புழக்கம் குறித்த எனது தொடர் எச்சரிக்கைகளுக்கு செவிமடுக்காமல் இந்த தி.மு.க அரசு செயலற்று இருந்ததன் விளைவே, தற்போது தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டால் அதிகரிக்கும் குற்றச் செயல்களும் பொதுமக்களுக்கான இடையூறுகளும்.
கடந்த சில நாட்களாக போதைப்பொருட்களால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்த செய்திகள் பெருமளவு அதிகரித்துள்ள நிலையில், இனியாவது இதுபோன்ற சம்பவங்கள் நிகழாவண்ணம் போதைப்பொருள் புழக்கத்தை தடுத்து, சட்டம் ஒழுங்கை சீர்படுத்துமாறு தி.மு.க அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“