டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்த, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், தமிழ்நாடு அரசு துறைகளில் 75,000 காலிப்பணியிடங்கள் இன்னும் 18 மாதங்களில் நிரப்பப்படும் என அறிவித்தார். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி மூலம் மட்டும் 17,595 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் குரூப் 4 காலிப்பணியிடங்கள் சுமார் 10,000 வரை அதிகரிக்கும் என தேர்வர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 480 இடங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது தேர்வர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களை அதிகரிக்கக் கோரி எக்ஸ் தளத்தில் #increase_group4_vacancy என்ற ஹேஷ்டேக் மூலம் தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;
””ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட தி.மு.க அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
"தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்" என்று தேர்தல் வாக்குறுதியை அள்ளி வீசிவிட்டு, தற்போது டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தொகுப்பில் 20000 இடங்கள் நிரப்ப வேண்டிய சூழலில், நடப்பாண்டில் அதில் வெறும் கால் பங்கான 6244 இடங்களை மட்டுமே நிரப்புவதன் மூலம் இத்தேர்வைக் கனவாகக் கொண்ட லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிக்கும் தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனம்.
போட்டித் தேர்வு மாணவர்களின் ஒருமித்த கோரிக்கையினைக் கருத்திற்கொண்டு, நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்குமாறு தி.மு.க முதல்வரை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வருவதற்காக சொன்னது அத்தனையும் பொய்" என்ற ரீதியில், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 19, 2024
"தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம்… pic.twitter.com/g1Q3bs5rRk
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.