அ.தி.மு.க-வின் செயற்குழு கூட்டம் வரும் மே மாதம் 2-ஆம் தேதி, சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தந்திருந்தார். தமிழக பா.ஜ.க தலைவர் நியமனம் மற்றும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான அவரது வருகை, அரசியல் களத்தில் பேசுபொருளானது.
அந்த வகையில், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க இடையே கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க மீண்டும் அங்கம் வகிக்கிறது.
இந்த சூழலில் அ.தி.மு.க-வின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்று அக்கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி மற்ற கட்சியினரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், கட்சியின் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக செயற்குழு கூட்டத்திற்கான அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதனடிப்படையில், வரும் மே மாதம் 2-ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், கட்சியின் அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக செயற்குழு உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தங்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழுடன் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணைந்த பின்னர் நடத்தப்படும் முதல் செயற்குழு கூட்டம் என்ற அடிப்படையில், இதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். மேலும், அன்றைய தினம் சில முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் வெளியாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.