மறைந்த கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவை என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இன்று (ஜூலை 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காவலர்களின் மன அழுத்தத்தை போக்க கடந்த கால அ.தி.மு.க அரசில்
நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை சரக டிஐஜியாக இருந்த மறைந்த விஜயகுமார் திறமையான மற்றும் நேர்மையான அதிகாரி.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரை பணியில் தொடர அனுமதித்தது ஏன்? விஜயகுமாருக்கு 6 மாதம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. காவலர் நல்வாழ்வு திட்டத்தினை தற்போதைய ஆளும் திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. டிஐஜி உயிரிழந்து தொடர்பாக சிபிஐ மூலம் முழுமையாக விசாரிக்க வேண்டும். காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்.
மன அழுத்தம் ஏற்பட்டால் அரசு இனியாவது ஓய்வு வழங்க வேண்டும். காவலர் நல்வாழ்வு திட்டத்தை தமிழக அரசு மீண்டும் துவங்க வேண்டும். காவல்துறை உயரதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் நடவடிக்கை தேவை. மகளிர் உரிமை திட்டம் துவங்கட்டும் அதனைப் பற்றி பிறகு பேசலாம். அதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு பூர்வாங்கப் பணியை துவங்கிவிட்டது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் தான் பாஜகவின் அடிமை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினரை கண்டு திமுக நடுங்குகிறது. கொள்கை கோட்பாடு இல்லாத கட்சி திமுக" என விமர்சனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“