சைதை துரைசாமியை வேலைவெட்டி இல்லாதவர் என்றும், அவர் ஒரு சந்தர்ப்பவாதி என்றும் அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் (ஏப்ரல் 5) கிருஷ்ணகிரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அ.தி.மு.க துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி கலந்து கொண்டார். அப்போது, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, சைதை துரைசாமியின் கருத்துகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, அ.தி.மு.க அணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சைதை துரைசாமி கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, கே.பி. முனுசாமி பதிலளித்தார்.
அதன்படி, "அ.தி.மு.க-வை பொறுத்தவரை ஏற்கனவே மாநிலங்களைவையில் கூட நாங்கள் முன்வைத்த கோரிக்கை என்னவென்றால், இன்னும் விரிவாக ஆய்வு செய்து இஸ்லாமியர்களுக்கு ஏற்ற வகையில் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறினோம்.
அதனடிப்படையில் தான் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தோம். நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்ட முன்வரைவிற்கு எதிராக, மாநிலங்களவையில் இருக்கும் அ.தி.மு.க உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
சைதை துரைசாமி கூறுகின்ற கருத்துகளை எதிர்ப்பவர்கள் களத்தில் இருப்பவர்கள். அ.தி.மு.க-விற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்கள் தான் அவரது கருத்துகளை எதிர்க்கின்றனர். உடல், பொருள், ஆவி, வியர்வை என அனைத்தையும் சிந்தி இந்த இயக்கத்திற்காக பங்காற்றியவர்கள், அனைவரும் கடுமையாக உழைப்பவர்கள்.
சைதை துரைசாமிக்கு வேறு வேலைவெட்டி இல்லை. பல்வேறு கட்சி தலைவர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அந்த தொடர்பின் வாயிலாக மற்றவர்களை திருப்திபடுத்துவதற்காக சில கருத்துகளை சைதை துரைசாமி கூறி வருகிறார்.
அ.தி.மு.க-விற்கு எந்த விதமான தொடர்பும் இல்லாத நபர் தான் சைதை துரைசாமி. அவரது கருத்துகளை கேட்கும் போது, உண்மையாகவே கடுமையாக உழைக்கும் உழைப்பாளிக்கு கோபம் வரும்.
அதன் வெளிப்பாடு தான் சைதை துரைசாமியின் கருத்துக்கு எதிராக வரும் கருத்துக்கள். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், எங்கள் கட்சியின் முன்னோடி. தன்னுடைய பணியை சிறப்பாக செய்பவர் தான் செங்கோட்டையன்.
தேவையில்லாமல் அ.தி.மு.க-வில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சைதை துரைசாமி செயல்படுகிறார். அவர் ஒரு சந்தர்ப்பவாதி" என்று அவர் தெரிவித்துள்ளார்.