அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், பூத் கமிட்டி பணிகளை டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் முடிக்க பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தயாராவதற்கான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுத்தல், பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி மற்றும் கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. இதை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட பொறுப்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் என்று பொறுப்பாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அடுத்ததாக, டிசம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“