நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் மனு அளிக்கும் நாள் நேற்று தொடங்கியது. இதில் 250 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விண்ணப்பங்கள் வழங்கும் பணியை தொடக்கி வைத்தனர்.
அதிமுக விருப்ப மனு விண்ணப்பம்
அ.தி.மு.க உறுப்பினர்கள் 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை நேற்று முதல் பிப்ரவரி 10 ஞாயிற்றுக்கிழமை வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிரப்பிய விண்ணப்பங்களை பிப்ரவரி 10 மாலை 5 மணிக்குள் கட்சித் அலுவலகத்தில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெறப்பட்டுக்கூட்டணிப் பேச்சு, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு அனைத்தும் முடிந்தபின் எந்தெந்தத் தொகுதிகளின் வேட்பாளர் யார் என்கிற பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில், நேற்று மட்டுமே அதிமுக சார்பில் 250 விருப்ப மனுக்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும், துணை முதல்வர் மற்றும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திர நாத்தும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். இதேபோன்று முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, உள்ளிட்டோர் விருப்பமனு விண்ணப்பங்களை பெற்று சென்றனர்.