தஞ்சாவூர் திலகர் திடலில் நேற்று இரவு (ஏப்ரல் 6)நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக வேட்பாளர் சிவநேசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, `இந்த தொகுதியில் அதிமுக போட்டியிட்டால் எப்படி வேலை செய்வீர்களோ, அதே போல் தேமுதிக வேட்பாளருக்கும் அதிமுகவினர் வேலை செய்து, பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தஞ்சாவூர் பகுதி செழித்தால் தான் தமிழகமும் செழிக்கும். ஆனால் இங்குள்ள விவசாயிகளுக்கு எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு வழங்கவில்லை.
நான் முதல்வராக இருந்த போது வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நிலையை உணர்ந்து, வறட்சி நிவாரணம் வழங்கினேன். விவசாயிகளை கண் இமை காப்பது போல் அதிமுக அரசு காத்தது. ஆனால் திமுக ஆட்சியில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கொண்டு வந்து டெல்டாவை அழிக்க பார்த்தார்கள். முப்போகம் விளையக்கூடிய இந்த பூமியை திமுகவினர் அழிக்கப் பார்த்தனர். அவற்றிலிருந்து காப்பாற்றினோம். விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து, அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் பல திட்டங்களை கொண்டு வந்ததை தடுத்து பாதுகாத்தோம். இப்படிப்பட்ட திமுகவுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் இப்பகுதி மக்கள் மரணஅடி கொடுக்க வேண்டும். இந்த பசுமையான பூமியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் பேசி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனை சட்டப்பூர்வமாக்கினோம். 50 ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்த காவிரி நீர் பங்கீடு பிரச்னையை அதிமுக அரசு தான் தீர்த்து, கர்நாடகத்திடமிருந்து சட்டப்படி நீரை பெற்று விவசாயிகளை பாதுகாத்தது.
ஸ்டாலின் முன்பு "கோ பேக் மோடி" என்றார். ஆனால் அவரையும், அவரது சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ள தற்போது "வெல்கம் மோடி" என்கிறார். அவர் ஒரு கோழை, கூட்டணி கட்சிகளின் தயவில் ஆட்சியை நடத்துகிறார். இண்டியா கூட்டணியின் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. அப்போது மு.க.ஸ்டாலின் அந்த கூட்டத்துக்கு சென்றார். அதே நேரத்தில் டெல்டாவில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் 5.50 லட்சம் பரப்பளவில் நெற்பயிர்கள் காய்ந்து வந்தது. இதற்கு கர்நாடக முதல்வர், நீர்ப்பாசனத்துறை அமைச்சரிடம் தண்ணீர் கேட்காமல் வந்தார். இதனால் டெல்டாவில் குறுவை சாகுபடி பாதித்தது. ஆனால் அதற்கு பயிர் காப்பீடு திட்டத்தை தரவில்லை.
அதிமுக ஆட்சியில் குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த முதல் அந்த திட்டம் கைவிடப்பட்டு, விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டனர். அதே போல் காவிரி நீர் மாசுவை கட்டுப்படுத்த ரூ.17 ஆயிரம் கோடியில் "நடந்தாய் வாழி காவிரி" என்ற திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டத்தை இன்று வரை திமுக அரசு அமல்படுத்த முயற்சிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதே போல் குடிமராமத்து மூலம் ஏரி, குளம், குட்டைகள் தூர்வாரும் திட்டம் கொண்டு வந்தோம். இதனால் விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால் திமுக அரசோ நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திமுக அரசு வந்த நாள் முதல் விவசாயிகளுக்கு விதை, உரம் இப்படி எந்த உதவியும் கிடைக்கவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல் நெல்லுக்கும், கரும்புக்கும் உரிய விலை கிடைக்கவில்லை. இதையெல்லாம் கேட்டால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு என அனைத்து வரிகளையும் உயர்த்தி மக்களை துன்பத்தில் தள்ளியுள்ளனர். இதிலிருந்து விடுபட வேண்டுமானால் நீங்கள் அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்" என்றார்.
முன்னதாக, பிரச்சார கூட்டத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் மலர்கள் தூவி, ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் சிவநேசனுக்கு, எடப்பாடி பழனிசாமி வந்ததும் எப்படி கும்பிட்டு கொண்டு நிற்க வேண்டும் என சொல்லிக் கொடுத்தனர் அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள். பின்னர், எடப்பாடி பேசிக்கொண்டிருக்கும் போது அதிமுக நிர்வாகிகள் சிலர் சிவநேசனை இங்க நில்லுங்க, அங்க நில்லுங்கனு மாறி மாறி நிற்க சொன்னதால் அவர் எரிச்சல் அடைந்து முகம் சுழித்ததை காண முடிந்தது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.