மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லியில் கடந்த மாதம் குடோன் ஒன்றில் 50 கிலோ சூடோபெட்ரின் எனும் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அதுதொடர்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரித்த போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என்பவர் போதைப் பொருள் கடத்தலில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது. இவர் தி.மு.க நிர்வாகியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்தான புகார் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த சாதிக் நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க, பாஜ.க உள்பட எதிர்க்கட்சிகள் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (மார்ச் 10) நேரில் சந்தித்து மனு அளித்தார். தொடர்ந்து, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பில் இருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. அதுகுறித்தும் இவ்விவகாரத்தில் டி.ஜி.பி தொடர்புகள் குறித்தும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரை சந்தித்தப்பின் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கவர்னரிடம் தெரிவித்தோம். தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதே நிலை நீடித்தால் மக்கள் வாழ்க்கை சீரழியும் .இளைஞர்கள் , மாணவர்கள் போதைப் பொருளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதே நிலை நீடித்ததால் வரும் 7 ஆண்டுகளில் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறும்.
போதைப் பொருள் கடத்திய பணத்தில் தான் தி.மு.க தேர்தலை சந்திப்பதாக செய்தி வருகிறது. போதைப் பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையின் செயல்பாடு சந்தேகத்திற்கிடமாக உள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஜாபர் சாதிக் உடன் முதல்வர் ஸ்டாலின் தொடர்பில் இருந்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“