தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
பரப்புரை மேற்கொண்டார்.
சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய இ.பி.எஸ், "2024-ல் அ.தி.மு.கவை பா.ஜ.க ஒழிக்கும் என அக்கட்சி தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அ.தி.மு.க தெய்வத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. உங்க பாட்டனையே பார்த்த கட்சி. உங்களை போல எத்தணையோ பேர் இப்படி கொக்கரித்தார்கள். ஆணவ திமிரில் இப்படி பேசாதப்பா. தமிழகம் ஏற்றம் பெற உருவாக்கப்பட்ட கட்சி அ.தி.மு.க. ஏழை, எளிய மக்கள் உயர உருவாக்கப்பட்ட கட்சி.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்களே நீங்கள் ஒரு கவுன்சிலரா கூட ஆக முடியல. நீங்கள் வந்து அதிமுகவை ஒழிப்பீர்களா?. 1998-யில் ஊர் ஊராக தாமரை சின்னத்தை அடையாளம் காட்டியதே அதிமுக தான், நீங்கள் எல்லாம் டெல்லியில் இருப்பவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர்கள் விரும்பி வைத்திருக்கும் வரை தான் நீங்கள் தலைவர் பதவியில் நீடிக்க முடியும். எப்போது வேண்டுமானால் நீங்கள் மாற்றப்படலாம்" என்று கடுமையாக பதிலடி கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“