தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றது. களவு, கொள்ளை, கொலை, அடிதடி, வழிப்பறிகள் குறைந்திருப்பதாக காவல்துறை மார்தட்டி வருகின்ற அதேநேரம், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த விபரம் வருமாறு:
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க தரப்பு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க கவுன்சிலரை கைது செய்ய முயல்வதாக ஏற்கனவே முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமையிலான அ.தி.மு.க-வினர் புகார் அளித்திருந்தனர்.
கரூர் மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள் இருக்கும் நிலையில், அப்போது நடந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 9 இடங்களிலும் திமுக கூட்டணி மூன்று இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் அ.தி.மு.க உறுப்பினர் எம்.எஸ் கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து முத்துக்குமார் என்பவர் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இதையடுத்து, நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்ற நிலையில் தி.மு.க-வின் பலம் 4 ஆக அதிகரித்தது. அ.தி.மு.க பலம் எட்டாக இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.
தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாத சூழலில் அப்போது தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பலமுறை தேர்தல் நடத்த திட்டமிட்டும் பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் 2 பேர் தி.மு.க-வில் இணைந்ததால் 6க்கு 6 என்ற சமநிலை உருவானது.
அ.தி.மு.க சார்பில் இன்று (டிசம்பர் 19) மாவட்ட துணை ஊராட்சி தலைவர் போட்டிக்கு திருவிக என்பவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, அவரை அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் மதுரையில் தனது கஸ்டடியில் பாதுகாப்பாக வைத்திருந்தார். இன்று 2 மணிக்குள்ளாக அவரை கரூர் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் திருவிக என்பவரை கரூர்க்கு அழைத்து சென்றார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி அருகே ஒரு பாலம் உள்ளது. அந்த பாலம் பகுதியில் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட அ.தி.மு.க-வினரின் கார் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று 4 கார்களில் வந்த மர்ம நபர்கள் அவர்களது காரை சுற்றி வளைத்து வழிமறித்து, முன்பக்க கண்ணாடி மற்றும் பின் பக்க கண்ணாடிகள் மீது ஆசிட் வீசியும், கார் கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தினர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அமைச்சரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் மற்ற கார்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் கரூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருவிக என்பவரையும் கடத்திச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
2 மணிக்குள் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் முடிந்துவிடும் என்பதால் வேட்பாளரை தி.மு.க-வினர் கடத்தி விட்டதாகவும் தகவல் பரவியது. இதனால், அங்கு பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வேடசந்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் துர்கா தேவி மற்றும் வேடசந்தூர் ஆய்வாளர் பாலமுருகன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தி.மு.க-வினர்தான் வேட்பாளரை கடத்தினார்கள் எனக் கூறி கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுகவினர் குவிய தொடங்கியுள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி மாவட்டம்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.