கட்சியின் ஒட்டுமொத்த அதிகாரங்களையும், கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி அதிமுக செயற்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தற்காலிக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டுள்ளார். அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் மரணமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிக தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அதிமுக செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடிப்படை உறுப்பினர்களால்தான் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற புதிய விதியை மாற்றவோ, திருத்தவோ முடியாது என அதிமுக அமைப்பு விதியில் திருத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவை தவிர அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்களின் விவரங்கள்
இதனிடையே சசிகலா குறித்து விவாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய கூட்டத்தில் சசிகலா குறித்த எந்த விவாதமும் நடைபெறவில்லை.
முன்னதாக, அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அன்வர் ராஜா, சசிகலாவை கட்சியில் சேர்க்க வேண்டும் எனக்கூறியதாகவும், அதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil