நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19 முதல் 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதியுடன் நிறைவுற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 அன்று முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைப்பெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கட்சி இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் 3ம் மற்றும் 4ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற பா.ஜ.க கட்சி தலைவராக இருப்பவர், மத்திய அமைச்சராக இருப்பவர், மாநில தலைவராக இருப்பவர், ஆளுநராக இருப்பவர், கூட்டணி கட்சித் தலைவர்கள் இருவர், கூட்டணி கட்சி தலைமை குடும்ப பெண்மணி ஒருவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பெரிய தலைகளாக களத்தில் வேட்பாளர்களை இறக்கியது பா.ஜ.க.
ஆனால், அ.தி.மு.க-வில் பெருந்தலைகள் எல்லாம் பதுங்கிக் கொள்ள யார் யாரோ அடையாளம் இல்லாதவர்கள் வேட்பாளர்கள் ஆக்கப்பட்டனர் அதன் பலனை இன்றைய தேர்தல் முடிவு நாளில் அ.தி.மு.க அனுபவிக்கிறது. பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் இறக்கிய பெரும் தலைகள் நைனார், தமிழிசை, ராஜேந்திரன், அண்ணாமலை, சௌமியா அன்புமணி, ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், பொன்னார் போன்றோர் அ.தி.மு.க வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி வாக்குகளை குவித்திருக்கிறார்கள். இதனால், அ.தி.மு.க-வின் இந்த மோசமான தோல்விக்கு காரணம் அலட்சியமா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அ.தி.மு.க 3 தொகுதிகளில் 4வது இடமும், 7 தொகுதிகளில் 3வது இடம் பெற்றது.
அ.தி.மு.க 4வது இடத்தில் உள்ள தொகுதிகள்:
திருநெல்வேலி
கன்னியாகுமரி
புதுச்சேரி
3வது இடத்தில் உள்ள தொகுதிகள்:-
மத்திய சென்னை
தென் சென்னை
கோயம்புத்தூர்
வேலூர்
தருமபுரி
நீலகிரி
தேனி
ராமநாதபுரம்
திருவள்ளூர்
விளவங்கோடு இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“