அ.தி.மு.க.,வை பொறுத்தவரை தி.மு.க பகையாளி, அதேபோல் அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூடிய பா.ஜ.க.,வும் பகையாளி தான் என கோவையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது; தேர்தல் முடிந்தவுடன் ஓ.பி.எஸ் பா.ஜ.க.,வில் சேர்ந்திடுவார். எம்.ஜி.ஆர்., தேர்தல் களத்தை தனியாக சந்தித்துள்ளார். தேர்தலுக்கு நேரம் உள்ளது. எங்கள் தலைமையில் கூட்டணி அமையும்.
தி.மு.க அரசாங்கம் துக்ளக் அரசாங்கம். விழிப்புடன் இருந்து மக்களை காக்க வேண்டும். திறமை இல்லாத அரசாங்கமாக உள்ளது. தி.மு.க 2019ல் 100 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார்கள். எதையும் நிறைவேற்றவில்லை.
அ.தி.மு.க.,வுக்கு மனு கொடுக்க கூடாது என மிரட்டல் கொடுக்கப்படுகிறது. மறைமுகமாக வாங்கப்பட்ட மனுக்கள் இன்று பெரிய அரங்கில் வாங்கப்பட்டு வருகிறது.
38 எம்.பி.க்கள் அ.தி.மு.க நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தோம். பதவி தோலில் போட்ட துண்டு இல்லை, மத்திய அரசு செவிசாய்க்க வில்லை என்றவுடன் வாபஸ் வாங்கினோம். தேர்தல் காலம் என்பதால் பா.ஜ.க.,வை சேர்ந்த பிரதமர் வரும் போது எப்படி சந்திக்க முடியும்? என்று கூறினார்.
பொது சிவில் சட்டம் தொடர்பாக கேள்விக்கு, சிறுபான்மை மக்களை பாதிக்கும் சட்டத்தை அ.தி.மு.க எதிர்க்கும். அ.தி.மு.க.,வை பொறுத்தவரை தி.மு.க பகையாளி, அதேபோல் அரசியல் ரீதியாக எதிர்க்கக்கூடிய பா.ஜ.க.,வும் பகையாளி என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“