/indian-express-tamil/media/media_files/2025/06/01/IdDXsZ95SrzjQaCa6LsZ.jpeg)
ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பை பொறுத்தவரை கட்சி எதை அறிவிக்கிறதோ அதை பின்பற்றுவது தான் கட்சி தொண்டர்களுக்கு அழகு என்றும் தொண்டர்கள் இரண்டு கோடி பேர் உள்ள நிலையில், அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் பொழுது நிறைய வாய்ப்புகள் வரும் என்றும் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன், “ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்களாக அ.தி.மு.க.,வின் வழக்கறிஞர் அணி செயலாளராக உள்ள இன்பதுரை மற்றும் ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனபால் என இரண்டு பேரை அ.தி.மு.க பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 2026 இல் ஒரு இடம் ஒதுக்கப்படும் என முறையாக அறிவித்திருக்கிறார்கள். தற்போது வரை அ.தி.மு.க கூட்டணியில்தான் தே.மு.தி.க இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் தே.மு.தி.க.,விற்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்படும் என்று பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
ஒரு மரபின் அடிப்படையிலேயே மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்க்கு மதுரையில் நடைபெறும் தி.மு.க பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்று கூறினார்.
ராஜ்யசபா சீட் தங்களுக்கு ஒதுக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளதா என்ற கேள்விக்கு, ராஜ்யசபா சீட்டை பொறுத்த வரை கட்சி எதை அறிவிக்கிறதோ அதை பின்பற்றுவது தான் கட்சி தொண்டர்களுக்கு அழகு. அ.தி.மு.க தொண்டர்கள் இரண்டு கோடி பேர் உள்ள நிலையில் நிறைய வாய்ப்புகள் உள்ளது. அ.தி.மு.க ஆட்சிக்கு வரும் பொழுது நிறைய வாய்ப்புகள் வரும் என்று வைகைச் செல்வன் பதிலளித்தார்.
மேலும் நடிகர் கமலஹாசன் வாரிசு அரசியலை எதிர்த்து தான் கட்சியை தொடங்கினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக அண்ணா அறிவாலயத்தில் தனது கட்சியை அடகு வைத்து விட்டார் என்றும் வைகைச் செல்வன் விமர்சித்தார்.
அ.தி.மு.க குறித்து விமர்சித்த தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா குறித்த கேள்விக்கு, அ.தி.மு.க ஒரு பெரிய கட்சி. காய்த்த மரம் தான் கல்லடிபடும். அ.தி.மு.க.,வை விமர்சிக்க விமர்சிக்க அது வளர்ந்து கொண்டுதான் இருக்கும். அடிக்க அடிக்க பந்து உந்துவது போல, அறுக்க அறுக்க வைரம் மின்னுவது போல எவ்வளவு சோதனை நடந்தாலும் வருகிற தேர்தலில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும்.
இதேபோல் 2026 தேர்தலில் நிறைய பேர் கூட்டணிக்கு வருவார்கள். கூட்டணி மாற்றம் எல்லாம் இருக்கும். கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் கருத்து தெரிவிப்பார் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.