கழக பொதுக்குழு கூட்டம் என்றாலே அம்மாவிற்கு உற்சாகம், எங்களுக்கோ பீதி. பொதுக்குழு கூட்டம் முடியும் வரை ஒரே பரபரப்பு.
தீர்மானம் எழுத குழு அமைப்பார்கள். என்னிடம் தீர்மானத்திற்கான குறிப்புகளை தந்து விடுவார்கள். அதை டைப் செய்து குழுவினரிடம் தருவோம். தீர்மானங்களை குழுவினர் தயார் செய்து அம்மாவிடம் சமர்ப்பிப்பார்கள். அம்மா திருத்தி தரும் வரை குழுவிற்கும் பயம் தொற்றிக் கொள்ளும்.
இரங்கல் தீர்மானத்தில் இடம் பெறும் பெயர்களைப் பார்த்து இதில் அவர் பெயர் எங்கே என்று எங்களை திட்டும் போது தான் அய்யோ மறந்துவிட்டோமே என்பது நினைவுக்கு வரும். தலைவர் முதல் உடன்பிறப்பு வரை எப்படிதான் ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பது எங்களையும் பிரமிக்க வைக்கும்.
பல பேர் சேர்ந்து தயாரித்த தீர்மானங்களை, அம்மா திருத்தம் செய்வதைப் பார்க்கும் போது, இதனால் தான் அம்மா முதலமைச்சராக இருக்கிறார்கள் என்பதை யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அம்மாவின் நினைவாற்றல் அப்படி. எதையும் துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். படித்து பார்க்கும் போது அவர் சிந்தனை அதில் லயித்துவிடும். அவர் செய்யும் திருத்தங்கள் அவருடைய திறமையை பறைசாற்றும். குழுவினரே ஆச்சரியப்பட்டு பேசிக் கொள்வார்கள்.
செயற்குழு, பொதுக்குழு அறிவிப்பு முதல் பணியை கவனத்தோடு ஆரம்பிப்பார்கள். மண்டபம் புக் செய்வது, பந்தல் அமைப்பது, சமையல்காரரை நியமிப்பது, நிகழ்ச்சி நிரல், தீர்மானம் குறித்த ஆலோசனைக் கூட்டம், அவரே எழுதி தரும் சமையலுக்கான மெனு அப்பப்பா அம்மாவின் அக்கறை பார்ப்பவரையும் வியக்க வைக்கும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று உணவுதான். வெளியூரில் இருந்து வரும் கழக உடன்பிறப்புகள் மனம் நிறைவதோடு, வயிறும் நிறைய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அசைவம், சைவத்திற்கு அவர் எழுதித் தரும் பட்டியலைப் பார்க்கும் போது, மலைப்புதான் வரும். இதை ஒருவர் சாப்பிட முடியுமா என்று எங்களுக்குள் பேசிக் கொள்வோம். பல வகையான உணவுகள் இடம் பெற்றிருக்கும். அதை உண்டவர்களே அதற்கு சாட்சி. அம்மாவும் பொதுக்குழு முடிந்தவுடன் உடன்பிறப்புகளுடன் உணவு அருந்தவும் செய்வார்கள்.
ஒருமுறை எப்போதும் சமையல் செய்யும் ஆத்தங்குடி பெருமாளுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்தார்கள். ஒரு இடத்தில் அவர் செய்த சமையல் அம்மாவிற்கு பிடித்து போனதன் காரணம். அன்று பொதுக்குழு கூட்டம் முடிந்தவுடன் அம்மா போயஸ்கார்டன் வந்துவிட்டார்கள். மாலையில் என்னிடம் பிரியாணி சாப்டியா என அம்மா கேட்க, நானும் சாப்பிட்டேன் என்றேன். நல்லாயிருந்ததா என்றார்கள். நானும் தயக்கத்தோடு நல்லாயிருந்தது என்றேன். உண்மையைச் சொல் என்றார்கள். சுமார் என்றேன். அதானே பார்த்தேன், வீட்டில் சாப்பிட்டவர்கள் சுமார் என்றார்கள் அதனால் தான் உன்னிடம் கேட்டேன் என்றார்கள். சரி, அடுத்தமுறை ஆத்தங்குடி பெருமாளையே சொல்லிவிடு என்றார். அந்த அளவிற்கு கழக உடன்பிறப்புகள் மீது அக்கறை வைத்திருந்தார். அவர்கள் சாப்பிட்டு சந்தோஷப்பட வேண்டும் என்று நினைத்தார்கள். கழகத் தொண்டர்களுக்கு உண்மையிலேயே அம்மாவாகிப் போனார் என்பதே நிதர்சனம்.
எப்போதும் தலைமைக்கழக நிர்வாகிகளை கடைசி நிமிடம் வரை இருந்து கவனிக்க சொல்வார்கள். வீட்டிற்கு வந்தாலும் இண்டர்காமில் விசாரித்துக் கொண்டே இருப்பார்கள். அனைவரும் பத்திரமாக ஊர் போய்ச் சேர வேண்டும் என்ற உள்ளம் அவருக்கு. பொதுக்குழு முடியும் போது, உணவு அருந்திவிட்டு பாதுகாப்பாய் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்கள். புரட்சித்தலைவரின் வாரிசு அல்லவா!
இந்த பரபரப்பான புயலில் சிக்கி சின்னாபின்னமாவது நாங்கள் தான். செயற்குழு, பொதுக்குழு அறிவித்ததிலிருந்து முடியும் வரை எங்களது இதயத்துடிப்பு அதிகரித்துவிடும். நெருப்பின் பக்கத்தில் இருப்பவர்களுக்கே அந்த தீயின் சூடு தெரியும். தூரமாய் இருந்து பார்ப்பவர்களுக்கு இது எப்படி புரியும்.
அம்மா இல்லாத பொதுக்குழு, தாயில்லாத குடும்பம் தானே!