அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்த நிலையில், புதன்கிழமை (ஆகஸ்ட் 17) தீர்ப்பு வழங்குகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் கடுமையாக நடந்து வருகிறது. ஜூலை 11-ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் அறிவிக்கக் கோரியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரித்தார். அவர் இந்த வழக்கில், அதிமுக பொதுக்குழுவை திட்டமிட்டபடி நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றம் 2 வாரங்களில் விசாரித்து தீர்வு காண உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கை வேறு நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் விசாரித்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிட்டாமல் தள்ளி வைத்தார்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான நாளை (ஆகஸ்ட் 17) தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், இந்த வழக்கில் வெற்றி யாருக்கு ஓ.பி.எஸ்-க்கா அல்லது இ.பி.எஸ்க்கா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் எழுந்துள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”