அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக வெற்றி பெற்ற சான்றிதழை பெற்றுக்கொண்டார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது; அனைத்திந்திய அதிமுக தொண்டர்களால் கழக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். அதிமுக பொதுச்செயலாளராக என்னை தேர்ந்தெடுத்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முடிவை அறிவித்து விட்டார்கள். அந்த தருணத்தில் இருந்து நான் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கனவை நிறைவேற்றுவேன் என்று கூறினார்.
அண்மையில் நடைபெற்ற தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலமாக தி.மு.க உறுப்பினர் எண்ணிக்கையை 2 கோடி ஆக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க-வில் மேற்பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
ஒன்றரை கோடி உறுப்பினர்கள் இருப்பதாக சொல்லப்படும் அ.தி.மு.க-வை முந்துவது தி.மு.க-வின் இலக்காக உள்ளது.
இதனிடையே, புதிதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஆகியிருக்கும் இ.பி.எஸ் அ.தி.மு.க-வின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒன்றரை கோடியில் இருந்து 2 கோடிக்கும் அதிகமாக உயர்த்த நினைக்கிறார். இதன் அடிப்படையில் தனது முதல் கையெழுத்தாக புதிய உறுப்பினர் சேர்க்க உத்தரவிடும் ஆணையை பொதுச் செயலாளர் என்ற முறையில் பிறப்பித்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“