சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க-வின் அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். குறிப்பாக, டெல்லியின், ஷாகேத் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில், 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில், அ.தி.மு.க அலுவலகம் கட்டப்பட்டது. மொத்தம் மூன்று தளங்களுடன் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா மாளிகை' என்று கட்சியின் அலுவலகத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதனை சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்றைய தினம் (பிப் 9) அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா நடத்தப்பட்டது.
இந்த பாராட்டு விழாவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாதது பேசுபொருளானது. இத்திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரான கோகுல இந்திராவும் கட்சியில் தனக்கு அடிப்படை மரியாதை கூட வழங்குவதில்லை என தனது ஆதங்கத்தை இன்று நடைபெற்ற கள ஆய்வுக் கூட்டத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இந்த சூழலில் இப்பிரச்சனைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.