scorecardresearch

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்; தலைவர்கள் கைது

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்; சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போராட்டம்; தலைவர்கள் கைது

எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரம்; தமிழகம் முழுவதும் அ.தி.மு.க போராட்டம்; தலைவர்கள் கைது

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்றது.

நேற்று சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கூறி இ.பி.எஸ் தரப்பு அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் கோஷங்கள் எழுப்பினர். சட்டப்பேரவை விதிகளைக் கூறி, சபாநாயகர் அங்கீகரிக்க மறுத்ததால், அ.தி.மு.க உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்: ஆசிட் கலந்த குளிர்பானம்… 11 வயது மாணவன் அஸ்வின் மரணத்தில் ஓயாத மர்மம்!

இதனையடுத்து, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை எனக் கூறி, அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கருப்புச்சட்டை அணிந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். போராட்டத்தில் கலந்துக் கொண்ட இ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இ.பி.எஸ், ”சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கைக்கு அனுமதி கோரினோம். அது தொடர்பான உச்ச நீதிமன்ற ஆதாரங்களை சபாநாயகருக்கு நாங்கள் முறைப்படி அனுப்பிவைத்தோம். அந்த கோரிக்கை மீதான முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டார். இது ஜனநாயகப் படுகொலை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்கியது என்பதற்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.

ஆனால், தமிழக முதலமைச்சர் ஆலோசனைப்படி ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓ.பி.எஸ்-ஐ பி டீமாக பயன்படுத்தி அ.தி.மு.க.,வை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை.

நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓ.பி.எஸ்-ம் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினார். இந்த முயற்சிகள் எல்லாம் பச்சையாக தெரிகிறது. அரசியல் ரீதியாக ஒரு சபாநாயகர் செயல்படுவது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி ஆட்சி செய்கிறார்கள். எங்களுக்கு நீதிவரை போராடுவோம்” என்று கூறினார்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அ.தி.மு.க.,வினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கூடிய அ.தி.மு.க.,வினர் கட்சி கொடியேந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகே சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அ.தி.மு.க எதிர்கட்சி தலைவர் உள்பட அ.தி.மு.க.,வினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அ.தி.மு.க.,வினர் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திருச்சி மாநகரில் முன்னாள் எம்.பி ரத்தினவேல், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. லால்குடியில் முன்னாள் எம்.பி ப.குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk hunger strike against tamilnadu assembly speaker decision

Best of Express