விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை சூசகமாக கூட்டணி அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
சென்னை, காமராஜர் அரங்கத்தில் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சி பிரதிநிதிகளை ஒன்றிணைத்து மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாட்டில் தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வி.சி.க தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ராஜா, அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, "திருமாவளவன் எங்கு செல்வார் என தமிழ்நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. திருமாவளவன் நம்மோடு தான் இருக்கிறார்; நல்லவர்களோடு தான் இருப்பார்" எனக் கூறினார். அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிகழ்வில், திருமாவளவனிடம் சூசகமாக கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது போல் இன்பதுரை பேசியது, பலரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகனை சுட்டிக் காட்டிய இன்பதுரை, "வேல்முருகன் இருக்கும் இடத்தில் வெற்றி இருக்கும். முன்னர் இரண்டு முறை அ.தி.மு.க கூட்டணியில் இருந்தார். அப்போது அ.தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது, தி.மு.க-வில் இருக்கிறார். அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்" எனவும் கூறினார்.
இந்நிலையில், இன்பதுரைக்கு பதிலளிக்கும் விதமாக அதே மேடையில் திருமாவளவன் பேசியுள்ளார். "விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் மக்களோடு தான் இருக்கும். தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்காக போராடுவது என்பது வேறு. தேர்தல் அரசியலில் கட்சி நலன், காலச்சூழல் கருதி முடிவு எடுக்கப்படும். ஆனால், மக்கள் பிரச்சனை என்றால் கட்சி அடையாளம் கடந்து மக்களுக்காக, மக்களோடு நிற்போம்" என திருமாவளவன் கூறியுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தாங்கள் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருக்கிறோம் எனவும், வேறு ஒரு கூட்டணிக்கு செல்வதற்கான தேவை எழவில்லை எனவும் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“