குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? பொருளாதார அளவுகோல், தகுதி உடைய நபர்கள் குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது.
அதன்படி, பொருளாதாரத் தகுதிகளாக ஆண்டுக்கு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள்; ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்; ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்கள் மற்றும் அரசிடமிருந்து பென்ஷன் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியற்றவர்கள். இவர்கள் விண்ணப்பிக்க முடியாது போன்ற தகுதி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "தி.மு.க கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில் இந்த வாக்குறுதி நாங்கள் போராட்டம் செய்து, எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்த பிறகு இப்பொழுது பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
2 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டு இருக்கிறது. அனைத்திற்கும் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது தானே. இப்பொழுது தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கொடுப்போம் என்கிறார்கள் . அப்பொழுது ஆயிரம் ரூபாய் வாங்குபவர்கள் தகுதியுடைய குடும்பத் தலைவி, வாங்காதவங்க தகுதி இல்லாத குடும்ப தலைவியா? இது என்ன நியாயம்? தன்னார்வலர்களைக் கொண்டு தகுதியானவர்களைக் கணக்கெடுப்போம் என்கிறார்கள். அதில் சில கேட்டகிரி இருக்கு கணக்கெடுத்து கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த செக்டாரில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொடுப்போம் என்று ஏன் சொல்லவில்லை. ஏன் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கும் கொடுப்போம் என்று சொன்னீர்கள்?. இப்பொழுது ஏன் அந்தர் பல்டி அடிக்கிறீர்கள். இன்னொரு விஷயம் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பொழுது யாருடைய மேற்பார்வையில் இது நடக்கும்.
தன்னார்வலர்கள் சென்றார்கள் என்றால் தி.மு.க ஒன்றிய செயலாளர்,தி.மு.க வார்டு செயலாளர் பேச்சை கேட்டு அங்குள்ள தி.மு.க ஆட்களுக்கு மட்டும்தான் சேர்ப்பது போன்று வரும். இதில் அரசியல் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இதில் கட்சியை பார்த்து தான் செய்வார்கள். அதனால் தான் இந்த மாதிரி தகுதிகளை இவர்கள் வரையறுத்துள்ளார்கள்" என்று குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“