scorecardresearch

இ.பி.எஸ் உருவப் படம் எரித்தவர் மீண்டும் பா.ஜ.க-வில் சேர்ப்பு… ஜெயக்குமார் நேரடி எச்சரிக்கை

தொண்டர்களை கட்டுப்படுத்துவது தலைமையின் பொறுப்பு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக் கூடாது. அ.தி.மு.க.,வுக்கும் எதிர்வினையாற்ற தெரியும். இடைநீக்கத்தை ரத்து செய்தது, கண்டிக்கத்தக்கது – ஜெயக்குமார்

Tamil news
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்த பா.ஜ.க நிர்வாகி நீக்கப்பட்ட மறுநாளே கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அ.தி.மு.க.,வில் இணைந்தார். மறுநாளே மேலும் சில பா.ஜ.க நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.,வில் சேர்ந்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக அ.தி.மு.க – பா.ஜ.க இடையே கருத்து மோதல் நிலவி வந்தது.

இதையும் படியுங்கள்: ’ஓ.பி.எஸ் வழக்கு செல்லாது: அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்’ : இ.பி.எஸ் பதில் மனு

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க நிர்வாகிகள் தீ வைத்து எரித்தனர். இதனால் இருதரப்புக்கும் மோதல் அதிகமானது. இதனிடையே, எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி மீது அக்கட்சி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்த சம்பவத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் தினேஷ் ரோடியை 6 மாத காலம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் வெங்கடேசன் நேற்று இரவு அறிவித்தார்.

ஆனால், நேற்று இரவு பா.ஜ.க.,வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தினேஷ் ரோடி இன்று காலை மீண்டும் பா.ஜ.க.,வில் சேர்க்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.,வில் இருந்து தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து தற்காலிகமாக விடுவித்த அறிவிப்பு செல்லாது என்று பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பாலகணபதி இன்று அறிக்கை விட்டுள்ளார்.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பா.ஜ.க நிர்வாகி நேற்று இரவு கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இன்று காலை கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க.,வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பா.ஜ.க.,வினர் எரித்தது கண்டனத்திற்குரியது. தலைவர்கள் தொண்டர்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். அ.தி.மு.க கிளர்ந்தெழுந்தால் என்ன ஆகும். அ.தி.மு.க எச்சரிக்கை விடுத்த பின், இ.பி.எஸ் புகைப்படத்தை எரித்தவர்களை இடைநீக்கம் செய்தீர்கள். ஆனால் ஏன் இடைநீக்கத்தை மீண்டும் ரத்து செய்தீர்கள்? இடைநீக்கம் செய்தது கண் துடைப்பு நடவடிக்கையா? கொழுந்துவிட்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். அது நல்ல விஷயமல்ல என்று தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க.,வை பொறுத்தவரை கட்சி மீதும், தலைவர்கள் மீதும் விமர்சனம் வைத்தால் கண்டிப்பாக எதிர் விமர்சனங்கள் வைக்கப்படும். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து வருகிறது. ஆனால் தொண்டர்களை கட்டுப்படுத்துவது தலைமையின் பொறுப்பு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக் கூடாது. அப்படி செய்தால், அ.தி.மு.க.,வுக்கும் எதிர்வினையாற்ற தெரியும். இடைநீக்கத்தை ரத்து செய்தது, அவர் செய்த செயலை ஊக்கப்படுத்துவது போலாகும். அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Admk jayakumar condemns suspension cancels bjp functionary who flame eps photo