சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்து வழக்கை ரத்துச் செய்யக் கோரி அமைச்சர் பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், உடனடியாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1996 முதல் 2001 ஆம் ஆண்டு வரை தி.மு.க ஆட்சி காலத்தில், அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்துக்கு சொத்து சோ்த்ததாக அமைச்சா் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது ஊழல் தடுப்புப் பிரிவினர் கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிர்வாக உத்தரவின்படி வழக்கு வேலூர், முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. போதிய ஆதாரங்களும் இல்லை எனக் கூறி இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து கடந்த ஜூன் 28- ஆம் தேதி வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஊழல் தடுப்புப் பிரிவு தரப்பில் இதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால், குற்ற விசாரணை சட்டம் 391- ஆவது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகளை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து மறு ஆய்வுக்காக கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி, இந்த வழக்கை தாமாக நடத்த இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. நிர்வாக ரீதியாக நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும். இந்த விவகாரம் தாமாக முன்வந்து எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக நீங்கள் அளித்த விளக்கம் தீர்மானித்தது போன்று உள்ளது என்று சுட்டிகாட்டினார்.
அமைச்சர் பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விழுப்புரத்திலிருந்து வேலுருக்கு நிர்வாக உத்தரவின் பேரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அந்த ஆவணங்களும் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தங்களுடைய உத்தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல் உள்ளது என்றும் சுட்டி காட்டினார். இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலக வேண்டும் என்று கூறவில்லை. அதே நேரத்தில் சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து தான் யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இருப்பினும், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையின் போது பதிவுத்துறை இணைக்கப்படும் என தெரிவித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 9 ஆம் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதற்கிடையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு அடுத்த 3 மாதங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்ததற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், இந்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க அமைச்சர்கள் விடுதலையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்த விசாரணைக்கு வழக்கில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மேல்முறையீடு செய்தால், தனது விவாதத்தை கேட்குமாறு ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“