புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படத்தை பா.ஜ.க பயன்படுத்தியதற்கு ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். புதுச்சேரி பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா படத்துடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியானது. போஸ்டரில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்துகள் இடம்பெற்றிருந்தது. இது அ.தி.மு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அ.தி.மு.க ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பபட்டது. அப்போது, இதற்குப் புதுச்சேரி அதிமுக பிரிவு சார்பில் அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களை பாஜக பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் தலைவர்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவிற்கு மட்டுமே சொந்தமானது. இப்படியொரு கீழ்த்தரமான அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது என்று விமர்சனம் செய்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“