சிவகாசியின் பிரதான தொழில்களான பட்டாசு மற்றும் அச்சு தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார். மேலும் பட்டாசு தொழிற்சாலை மற்றும் அச்சகத்தில் நேரில் ஆய்வு செய்து தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார்
விருதுநகர் மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சிவகாசி சாரிட்டீஸ் மண்டபத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள், அச்சக உரிமையாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு வணிகர்களை சந்தித்து தொழில் வளர்ச்சி மேற்கொள்வது, தொழில்களில் உள்ள குறைகள் குறித்து கலந்துரையாடினார்.
அப்போது, படைக்கல சட்டத்தில் இழிவான மற்றும் அருவருக்கத்தக்க தொழில் என பட்டாசு தொழில் குறிப்பிடப்பட்டுள்ளதை மதிப்பு மிக்க தொழிலாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர். மேலும் 60 சதவீத மின்சார கட்டண உயர்வு குறு சிறு தொழில்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் மின் கட்டண உயர்விலிருந்து காலண்டர் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க நீதிமன்றத்தில் எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து பட்டாசு தொழிலையும் காலண்டர் உற்பத்தி தொழில்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து அச்சகத்தில் ஆய்வு நடத்திய எடப்பாடி பழனிச்சாமி அச்சக உற்பத்தி பணிகள் குறித்தும் அதில் உள்ள குறைகளையும் கேட்டறிந்தார். தொடர்ந்து சிவகாசி அருகே ஆண்டியாபுரம் ஏ.ஆர்.டி பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து பட்டாசு தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தபோது, சரவெடி தயாரிக்க உச்ச நீதிமன்றம் தடை என்பதால் பட்டாசு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பதாகவும் இதனால் போதிய வருமானம் இன்றி தவித்து வருவதாக பெண் தொழிலாளர்கள் கவலையுடன் முறையீடு செய்தனர்.
அ.தி.மு.க ஆட்சி அமைந்த உடனே ஆய்வு மேற்கொண்டு பட்டாசு தொழில் மேம்படவும், தொழிலாளர் நலனும் மேம்பட முனைப்புடன் செயல்படுவோம் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொழிலாளிகள் மத்தியில் உறுதி அளித்தார்.