Advertisment

பட்டியலின மக்களுக்கு கொடுமைகள் தொடர்ந்தால், அ.தி.மு.க. வேடிக்கைப் பார்க்காது – இ.பி.எஸ் எச்சரிக்கை

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா தி.மு.க அரசு; எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை

author-image
WebDesk
New Update
edappadi k. palaniswami angry speech reporter at Delhi reason in tamil

எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு கொடுமைகள் தொடர்ந்தால், அ.தி.மு.க. வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி குழாய்களில் குடிநீர் திறக்கப்படவில்லை என ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கே.ஜனதா தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸ்; ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்" என்று சொல்வார்கள். இந்த விடியா தி.மு.க அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளின் ஆயுள் 8 நிமிடம் கூட இருப்பதில்லை. பொய்யும், புரட்டும் சொல்லி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா தி.மு.க அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

ஓட்டுக்காக "நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள், சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு, ஆதிதிராவிட மக்களின் சம்பந்தி நாங்கள்" என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் பம்மாத்து பேர்வழி ஆட்சியாளர்களின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தை நிலைகுலையச் செய்தது. இந்த மக்கள் விரோத ஆட்சியில் தலை முதல் கால்வரை சுயநல நோய் புரையோடிப்போய் சமுதாயத்தை சீரழித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் சுமார் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதி இல்லை என்றும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கே. ஜனதா அவர்களிடம், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையிட்டுள்ளனர்.

ஆதிதிராவிட மக்களின் கோரிக்கையை ஏற்று, கழக ஒன்றியக் கவுன்சிலர் கே.ஜனதா உடனடியாக ஆதிதிராவிடர் காலனியில் பைப் லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க தனது உறுப்பினர் நிதியில் இருந்து 5.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பைப் லைன் அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், ஆதிதிராவிடர் காலனிக்கு தி.மு.க.வைச் சேர்ந்த கடையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் திட்டமிட்டு, ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு பல்வேறு காரணங்களைக் கூறி குழாய்களில் குடிநீர் திறந்து விடவில்லை.

மேலும், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், குடிநீர் திறந்துவிடாததற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அவலமும் நடந்துள்ளது. இந்நிகழ்வை அறிந்தவுடன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடியாக லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா தி.மு.க. ஆட்சியில், பட்டியலின மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியைக் கொடுப்பதில் கூட இந்த விடியா திமுக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது.

ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தமிழகமே தலைகுனியும் வகையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த நிகழ்வில், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறேன் என்று நாடகமாடி வரும் நிலையில், தற்போது, ​​ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கே குடிநீர் வழங்காமல் தடுக்கும் தி.மு.க.வினரின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்த அவலங்களைப் பற்றி தி.மு.க.வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும், பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், அனைவரும் சமம் என்று பேசும் பொதுவுடைமைவாதிகளும் வாய்மூடி மௌனமாக இருப்பது விந்தையாக உள்ளது.

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால், அ.தி.மு.க. வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்று இந்த விடியா தி.மு.க. அரசை எச்சரிக்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Dmk Admk Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment