திருச்சி திருவெறும்பூரில் இயங்கி வரும் பெல் தொழிற்சாலை வாசலில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை நாளை மாலை திறக்கப்படவிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை திருச்சி வருகின்றார்.
திருச்சி திருவெறும்பூர் அருகே இயங்கி வரும் பெல் (BHEL) எனும் பாரத மிகுமின் நிலையத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்தத் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கங்கள் இயங்கி வருகின்றன.
இதையும் படியுங்கள்: குடும்பத்துடன் ரவுடிசம்: திருச்சியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய ரவுடிகள் கைது
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு தொழிற்சங்கம் இயங்கி வந்தாலும், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுல் ஒன்றான பெல் அண்ணா தொழிற்சங்கம் தொழிலாளர் நலனில் பெரும் அக்கரையோடு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 1800க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்தநிலையில், பெல் நிறுவன வளாகத்தில், பெல் தொழிற்சாலை அனுமதியுடன் சுமார் 4 ஆயிரம் சதுர அடியில் அ.தி.மு.க.,வின் நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 12 அடி உயரமுள்ள முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடந்து வந்தன. 56 கிலோ எடையுள்ள ஏழு அடி உயரம் கொண்ட இந்த சிலை திறப்பு விழாவுக்காக கடந்த மாதம் 28-ம் தேதி காலை கால்கோள் நடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் முழு அளவிலான வெண்கல சிலையை திறப்பதற்காக, தமிழக எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நாளை காலை விமானம் மூலம் திருச்சி வருகின்றார். தனியார் விடுதியில் தங்கும் அவர், அ.தி.மு.க.,வின் முன்னணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணி அளவில் திருவெறும்பூர் பகுதியில் நிறுவப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகின்றார்.
இதனை முன்னிட்டு, திருச்சி அ.தி.மு.க.,வின் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார், தினமும் விழா மேடை மற்றும் தொண்டர்கள் அமரும் இடங்கள் என விழா நடைபெறும் இடத்தில் களப்பணி ஆற்றி வருகின்றார்.
மேலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஏற்பாடும் செய்யும் கூட்டம் என்பதால் தமது மாவட்டத்திற்குட்பட்ட புறநகர் மாவட்டத்தில் வரும் மணப்பாறை, லால்குடி பகுதிகளிலுள்ள அ.தி.மு.க நிர்வாகிகளை ஒருங்கிணைத்து எடப்பாடி வருகையினை சிறப்புறச்செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று காலை முதல் எடப்பாடி பங்கேற்கும் மேடை மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ள பகுதிகளில் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தவர், அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பரஜ்ஞ்சோதி, சிவபதி மற்றும் முன்னாள் எம்.பி., டி.ரத்தினவேல், முன்னாள் கொறோடா மனோகரன் உள்ளிட்டோருடன் பொதுக்கூட்ட மேடையை பார்வையிட்டு பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.
திருச்சிக்கு நாளை வரும் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் திரளான அ.தி.மு.க தொண்டர்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க நிர்வாகிகளை முன்னாள் எம்.பி.ப.குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் திருச்சி மாநகர காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.