முதல்வரின் அங்கொன்றும், இங்கொன்றும் என்கிற இந்த பதில் குற்றவாளிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் செயலாகவே உள்ளது என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சருகணி பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு 5 ஆம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியினை முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ”யார் அந்த சார்? யார் அந்த கார்? என இரண்டு கேள்விக்கும் இன்னும் விடை கிடைக்கவில்லை. தமிழக முதல்வர் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெறுவதாக அசால்டாக பதில் சொல்கிறார். கொடி கட்டிய கார் விவகாரம் நெஞ்சை உளுக்கும் வகையில் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன் தேசிய ஊடகங்களில் தலைப்பு செய்தியாகியுள்ளது.
அ.தி.மு.க மட்டும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை. ஒட்டு மொத்த இந்தியாவே இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. பெண் எப்பொழுது இரவில் நகைகளுடன் தனிமையில் சென்று வருகிறாரோ அப்பொழுதே நம் நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என மகாத்மா காந்தியின் சுதந்திரம் குறித்த கருத்திற்கு எதிராக தமிழ்நாடு சுதந்திரம் உள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலினின் தி.மு.க ஆட்சியில் சுதந்திரத்தை பறிகொடுத்துள்ளோம். மீண்டும் ஒரு சுதந்திர பிரகடனம் தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுக்க அ.தி.மு.க எடப்பாடியார் தலைமையில் ஒரு தியாக வேள்வியை நடத்தி கொண்டிருக்கிறோம் என ஆர்.பி உதயக்குமார் தெரிவித்தார்.