பெரியார் பற்றிய ரஜினி வாய்ஸ் - இரட்டை இலை கட்சியின் இரட்டை நிலைப்பாடு

அண்மையில் துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது, 1971-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் ராமர், சீதை படத்தை ஈ.வே.ரா.பெரியார் செருப்பால் அடித்ததாகக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை உருவாக்கியது.

‘ராமர் – சீதை படத்தை பெரியார் அடிக்கவில்லை. கூட்டத்தில் ஜனசங்கத்தினர் வீசிய செருப்பை எடுத்து, திராவிடர் கழக தோழர் ஒருவர் ராமர் படத்தை செருப்பால் அடித்தார்’ என்று பெரியாரிய அமைப்பினர் விளக்கம் கொடுத்தனர். ரஜினி தனது கருத்தை வாபஸ் பெற்று, மன்னிப்பு கோராவிட்டால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என பெரியார் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அறிவித்தன.


இதையடுத்து, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நிருபர்களை சந்தித்த ரஜினிகாந்த், ‘என்னிடம் இருப்பது 1971-ல் சேலம் ஊர்வலம் தொடர்பாக அவுட்லுக்கில் வெளியான செய்தி. இந்த அடிப்படையிலேயே நான் பேசினேன். உண்மையை பேசியதால் இதற்கான மன்னிப்பு கேட்க முடியாது’ என அறிவித்தார்.

மெரினாவில் மாநகராட்சி அமைக்கும் கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகை நிர்ணயித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரியார் விவகாரத்தில் திராவிட கழகம் மற்றும் பெரியார் சார்பு அமைப்புகள் ரஜினியை மிகக் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில், திமுக ரஜினிக்கு எதிராக இதுவரை எந்தவொரு கடுமையான ஸ்டேட்மென்ட்டையும் முன் வைக்கவில்லை. ‘திமுக தலைவர் ஸ்டாலின் கூட, நண்பர் ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும்’ என்று மயிலிறகால் வருடிச் சென்றார்.

இது போன்ற தமிழ் உணர்வு விவகாரத்தில் எப்போதும் ஆக்ரோஷமான கமெண்ட்டுகளை உதிர்த்து உஷ்ணம் காட்டும் வைகோ கூட, சாதாரண கருத்துடன் சைலண்ட் மோடுக்கு சென்றுவிட்டார்.

அதேசமயம், ஆளும் இரட்டை இலை கட்சி இரட்டை நிலைப்பாட்டுடன் இந்த விவகாரத்தை சற்று தீவிரமாகவே அணுகி வருகிறது.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்

தீவிர கடவுள் பக்தரான துணை முதல்வர் ஓ.பி.எஸ், “தந்தை பெரியார், கீழ்தட்டு ஏழை-எளிய மக்களுக்காகவும் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபட்டார். பகுத்தறிவு பகலவனாக விளங்கினார். என்னைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மிக உயர்ந்த, உன்னத நிலைக்கு வருவதற்கு அடித்தளம் இட்டவர் தந்தை பெரியார். அவர் அந்த செயலில் ஈடுபடும்போது பல்வேறு விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்கள் எல்லாம் பொய்யாக உண்மைக்கு மாறாக போய் விட்டன. தந்தை பெரியார் சொன்ன கருத்துக்கள்தான் இன்று கோபுரத்தின் உச்சியில் நீடித்து நிலை கொண்டுள்ளது. அதை யாராலும் எந்த நேரத்திலும் குறை சொல்ல முடியாது. குறை சொல்பவர்கள் மீண்டும் பெரியாருடைய ஆரம்ப கால கட்டத்தில் இருந்து அவர் இந்த சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட முன் முயற்சிகளை எல்லாம் தீவிரமாக நன்றாக படித்து ஆராய்ந்து கருத்து சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்

ஆனால், அமைச்சர் ஜெயக்குமாரோ இந்த விவகாரத்தில் மற்ற அனைவரையும் விட உக்கிரம் காட்டியிருக்கிறார்.

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ” பழைய நிகழ்வுகளை பற்றி பேசுவதால் ரஜினிக்கு என்ன பி.எச்.டி. பட்டமா கொடுக்கப்போகிறார்கள். இது மறுக்க வேண்டிய சம்பவமல்ல, மறக்க வேண்டிய சம்பவம் என அதை ஞாபகப்படுத்தி தன்னுடைய கருத்திலேயே ரஜினி முரண்பாடாக உள்ளார்.

துக்ளக் பத்திரிகையில் வந்த செய்திக்கு அவுட்லுக் பத்திரிகை எப்படி ஆதாரமாக முடியும்? ரஜினி சொன்னது போல் 1971-ல் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் எதற்கு பேச வேண்டும். இது மலிவான அரசியல்.

தேவையில்லாத ஒன்றை பேசுவதற்கு பதில் ரஜினி வாய் மூடி மௌனமாக இருக்க வேண்டும். 1971ல் நடைபெறாத விஷயத்தை பேசி ரஜினி மக்களை திசை திருப்புகிறார். எத்தனை ரஜினி வந்தாலும் அதிமுகவை அசைத்துப் பார்க்க முடியாது.

நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாத கருத்தை கூறி இதுபோன்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம். அவர் வாயை மூடி மவுனமாக இருப்பது நல்லது. ரஜினிகாந்த் என்ன ஆதாயத்துக்காக இதை சொன்னார் என்று தெரியவில்லை.

மாறான கருத்தை சொல்லி மக்களை திசை திருப்பி மலிவான அரசியல் செய்யக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். எங்களை பொறுத்தவரையில் பெரியார் மதிக்கப்பட வேண்டியவர்” என்றார்.

தொலைக்காட்சி சேனல்களுக்கு கட்டணம் நிர்ணயிக்க ட்ராய்க்கு தடை? பதில் அளிக்க உத்தரவு!

அமைச்சர் செல்லூர் ராஜூ

ரஜினி குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “இன்று பெண்கள் ஊராட்சித் தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார். பெரியாரை பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மறக்க கூடாது.

ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது. பொறுமையாக பேசும் ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்” என்று ரஜினியின் பெர்சனல் வாழ்க்கையை சான்று காட்டி விமர்சித்தார்.

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையனோ, ‘பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்துக்கு ரஜினிகாந்த்தான் விளக்கமளிக்க வேண்டும்’ என்று சொல்லி சாஃப்ட் கார்னரில் நின்றுகொண்டார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து முற்றிலும் ரஜினி சார்பாகவே இருந்தது. அதுவும் ஆவேசமாக… குறிப்பாக ரஜினி ரசிகர்கள் பற்றி ஒன்று சொன்னார் பாருங்க, அதுதான் ஹைலைட்…

செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “பெரியாரைப் போன்றவர்கள் இல்லையென்றால் நான் அமைச்சராகி இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகத்தை பொறுத்தவரை ரஜினி கூறியதில் தவறு இல்லை.

ரஜினிகாந்த் நியாயவாதி, நல்ல மனிதர், மனதில் பட்டதை பேசுபவர், அவர் பேசியதில் உள்ள நியாயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். திமுகவின் முகமூடிதான் தி.க. , தி.க.வினர். ரஜினியை மிரட்டி பார்க்கிறார்களா?இவ்வளவு விஷயங்களையும் பார்த்தபிறகும் ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது.

ரஜினிகாந்த் என்ற தனிமனிதனை, தமிழச்சியை திருமணம் செய்த ஒரு மனிதனை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது” என்று தன் மனதில் பட்டதை பட் பட் என்று கொட்டிவிட்டார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில், வாக்கு வங்கி உள்ள கட்சிகள் இந்த விவகாரத்தில் அவசரப்படாமல் மிக நிதானமாக, இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் அமைதியாகவே இருக்கின்றன. அதேசமயம், அதிமுக தலைவர்கள் மத்தியில் இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இருப்பதும் அவர்கள் வாயிலாகவே நமக்கு தெரிகிறது.

இது, எதற்கு இவரை இப்போதே பகைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமா அல்லது தேர்தல் அரசியல் என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டதன் வெளிப்பாடா என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close