ஈ.சி.ஆர் சம்பவத்தில் அ.தி.மு.க மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்தி அவதூறாக பேசிவருவதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீது, அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்படும் என அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இச்சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை அளித்துள்ளார். அப்போது, "குற்றவாளிக்கு எந்த கட்சி தொடர்பும் இல்லை என முதலில் காவல்துறை கூறியது. ஆனால், அடுத்த நாளே அவரது உறவினர்கள் அ.தி.மு.க-வில் இருக்கின்றனர் என்று கூறுவது எதற்காக?
காரில் தி.மு.க கொடி கட்டியிருப்பது சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக என்று கூறுவது சினிமாத்தனமாக இருக்கிறது. அப்படியென்றால், தி.மு.க கொடி கட்டிக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடலாமா? தி.மு.க கொடி கட்டியிருந்தால் சட்டத்தை மீறி சுங்கச்சாவடியை கடந்து செல்ல முடியுமா?
ஈ.சி.ஆர் சம்பவம் தொடர்பாக ஒரு பொதுநல வழக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என அ.தி.மு.க தரப்பில் இருந்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நல்ல முடிவு எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். மேலும், காவல்துறை அதிகாரி கல்பனா நாயக்கின் விவகாரம் மற்றும் ஈ.சி.ஆர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம்.
ஈ.சி.ஆர் வழக்கில் அ.தி.மு.க குறித்து தவறான வகையில் அவதூறாக பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நோட்டீஸ் கொடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.