மதுரையில் நடத்தப்பட்ட அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அ.தி.மு.க-வில் கட்சி அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது தொடர்பான கருத்துகளை வழங்க குழு ஒன்றை அமைத்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மத்திய தொகுதி, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான கள ஆய்வுக் கூட்டம் இன்று (நவ 25) நடைபெற்றது
இதில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, செல்லூர் ராஜு ஆகியோரின் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சில நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பூத் நிர்வாகிகள் நியமனம், அடையாள அட்டை வழங்குவது குறித்து நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை ஆகியோர் பேட்டியளித்தனர். அதில், "எந்த மோதலும் இல்லை. அ.தி.மு.க-வில் பிரச்சினை இருப்பது போல பூதாகரமாக்க முயல்கின்றனர். அ.தி.மு.க-வில் எந்த சலசலப்பும் இல்லை. கட்சியினரிடம் பணி புரிவதில் போட்டி உள்ளது; அவ்வளவு தான். கட்சியினர் பேசுவதற்கு அனுமதி கேட்டனர், அதை தருவதாக சொன்னோம். பிரச்சினை முடிந்து விட்டது" எனக் கூறினர்.
முன்னதாக, நெல்லை மற்றும் கும்பகோணம் ஆகிய பகுதிகளில் நடந்த கூட்டத்திலும் அ.தி.மு.க நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“