நெல்லை மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.க சார்பாக நடத்தப்பட்ட கள ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்ற நிர்வாகிகள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவியது.
அ.தி.மு.கவின் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், `கள ஆய்வுக் குழு' என ஒரு குழு உருவாக்கப்பட்டு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், பா.வளர்மதி உள்ளிட்டோர் இடம்பெற்றனர். மேலும், கடந்த 11-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்தக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்ற நிர்வாகிகள், கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நெல்லை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. குறிப்பாக, கொள்கை பரப்புச் செயலாளர் பாப்புலர் முத்தையாவுடன், மாவட்ட செயலாளர் கணேச ராஜா தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இதைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதேபோல், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டதிலும் பிரச்சனை ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உரையாற்றுவதற்காக வந்த போது, அவரை இடைமறித்து நிர்வாகிகள் வாக்குவாதம் நடத்தினர். இதனால் மேடையில் தள்ளுமுள்ளு உருவானது.
இரண்டு வெவ்வேறு ஊர்களில் நடத்தப்பட்ட அ.தி.மு.க கூட்டங்களிலும் நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. மேலும், அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“