Vijayakanth to decide Alliance: எந்தக் கூட்டணியில் இடம் பெறுவது என்பது தொடர்பாக தேமுதிக இறுதிகட்ட ஆலோசனையில் இறங்கியிருக்கிறது. அமைச்சர்களுடன் நடப்பதாக கூறப்பட்ட ஆலோசனை கடைசி நேரத்தில் ரத்து ஆனது.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பில் திமுகவிட அதிமுக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. நேற்று பாமக, பாஜக கூட்டணி அறிவிப்பு மற்றும் தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்த அதிமுக, விஜயகாந்தின் தேமுதிகவையும் கூட்டணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.
அதேசமயம், 'எங்களுக்கு 9 அல்லது 8 சீட் வழங்க வேண்டும் என்பதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்' மிக உறுதியாக இருக்கிறார். 'கடந்த மக்களவை தேர்தலில் இருந்த அளவிற்கு தேமுதிகவிற்கு வாக்கு வங்கி இப்போது இல்லை' என்று அதிமுக தரப்பில் தேமுதிகவிடம் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. இருப்பினும், விஜயகாந்த் பிடி கொடுக்கவில்லை என்றே தெரிகிறது. இறுதியாக, 5 + 1 என்ற கணக்கில் பேச்சுவார்த்தையை முடிக்க அதிமுக முயன்று வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், இன்று மதியம் தேமுதிக அலுவலகத்தில் சுதீஷ் தலைமையில் நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயலிடமும் சுதீஷ் தொலைபேசியில் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று மாலை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தேமுதிகவுடன் இறுதிக் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அமைச்சர்கள் வரவில்லை. எனவே அதிமுக அணியில் தேமுதிக.வுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.
அதிமுக குறைந்தபட்சம் 25 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. எனவே 5 தொகுதிகளுக்கு மேல் தேமுதிக.வுக்கு வழங்க விரும்பவில்லை என தெரிகிறது. இது தொடர்பாக இன்று மாலை சுதீஷ் மீண்டும் தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேமுதிக.வின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும்? அதிமுக தரும் தொகுதிகளை ஏற்பதா? அல்லது, டிடிவி தினகரனுடன் இணைந்து 3-வது அணி அமைப்பதா? என்பது குறித்து அவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
கூடிய விரைவில் தேமுதிக தனது நிலையை தெரிவிக்கும் என தெரிகிறது.