எனக்காகவும், இந்த இயக்கத்திற்காகவும், இமயமே தன் தலையில் விழுந்தாலும், சறுக்காமல் வழுக்காமல் தன்னை அர்ப்பணித்தவர் என்று ஜெயலலிதா கூறியதாக செங்கோட்டையன் ஆடியோவை மேடையில் ஒலிக்கச் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிப்ரவரி 9 ஆம் தேதி கோவையில் விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளவில்லை. இது அ.தி.மு.க-வில் மட்டுமல்லாமல் தமிழக அரசியலிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கு, அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடித்தளமாக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்கள் மேடையில் இடம்பெறாததால் விழாவில் கலந்து கொள்ளவில்லை என செங்கோட்டையன் தனது அதிருப்தியை தெரிவித்தார். இது அ.தி.மு.க.,வில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, ஈரோட்டில் அமைந்துள்ள செங்கோட்டையன் வீட்டில் புதன்கிழமை (12.02.2025) ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக தகவல் பரவியது. குறிப்பாக, அவரது வீட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அவருடைய ஆதரவாளர்கள் கூடியிருந்ததால் இது போன்ற தகவல் பரவியது.
இதையடுத்து, தனது வீட்டில் ஆலோசனை கூட்டம் எதுவும் நடத்தப்படவில்லை என செங்கோட்டையன் விளக்கம் அளித்தார். மேலும், “என்னை சந்திக்க தினமும் 100 அல்லது 200 நபர்கள் வருவது வாடிக்கை தான். அதற்காக, ஆலோசனை கூட்டம் நடத்துவதாக கூறுவதா? தனியாக எந்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்படவில்லை” என செங்கோட்டையன் கூறினார்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
“எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் நான் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் முதலமைச்சர்கள் பெயர் இல்லை என்றுதான் சொன்னேன். அவ்வளவுதான். அ.தி.மு.க ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். என்னை சோதிக்காதீர்கள். அதுதான் எனது வேண்டுகோள்.
நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர், அம்மா வகுத்த பாதை. எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை. எம்.ஜி.ஆருக்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது. கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்.ஜி.ஆர். என்னை வாழவைத்தவர்கள் ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் தான். அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான். அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது,” என்று கூறினார்.
அப்போது பேச்சின் இடையே ”எதைக் கொடுத்தாலும் வெற்றிக்கரமாக முடிக்கக் கூடியவர் செங்கோட்டையன். அதனால் தான் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பதவியை அளித்தேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். மேலும், எனக்காகவும், இந்த இயக்கத்திற்காகவும், இமயமே தன் தலையில் விழுந்தாலும், சறுக்காமல் வழுக்காமல் தன்னை அர்ப்பணித்தவர் செங்கோட்டையன் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்” என்று கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன்னை பாராட்டும் ஆடியோவை செங்கோட்டையன் மைக்கில் ஒலிப்பரப்பினர். இதனைக் கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் ஆராவாரம் செய்தனர்.
அந்த ஆடியோவில், துளி சறுக்கலுக்கோ, சலனத்திற்கோ வழுக்கலுக்கோ இடம் கொடுக்காத கொள்கை உறுதியும், கொண்ட தலைமை மீது விசுவாசமும் கொண்ட தலைவராக இருந்ததால் தான் இன்று இத்தனை சிறப்புகளை பெற்று விளங்குகிறார் அன்புச் சகோதரர் செங்கோட்டையன் என்று ஜெயலலிதா பேகிறார். செங்கோட்டையன் திடீரென மேடையில் ஜெயலலிதா அவரை புகழ்ந்து பேசும் ஆடியோவை ஒளிப்பரப்பியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.