அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அக்கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கருப்பசாமி பாண்டியன் (வயது 76) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
1972 ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர் கருப்பசாமி பாண்டியன், 1977 இல் ஆலங்குளம் தொகுதி, 1980 இல் பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக கருப்பசாமி பாண்டியன் தேர்வானார்.
எம்.ஜி.ஆர் காலத்தில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ஆக செயல்பட்டவர். அ.தி.மு.க-வினர் மத்தியில் நெல்லை நெப்போலியன் என அப்போது அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர் கால மாவட்ட செயலாளர்களில் அண்மை காலம் வரை எஞ்சி இருந்த மிகச் சிலரில் இவரும் ஒருவர்.
ஜெயலலிதாவோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து 2006 தேர்தலில் தி.மு.க. சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர்ந்து 2015 இல் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பின், 2016 இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதி.மு.க.வில் இணைந்தார். அதன் பின்னர் 2018 இல் மீண்டும் தி.மு.க.விற்கு வந்த கருப்பசாமி பாண்டியன், 2020 இல் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.
இந்நிலையில் அண்மையில் அதி.மு.க. அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அ.தி.மு.க. தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.