என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்திற்கு எம்.எல்.ஏ. ரவி அஞ்சலி செலுத்தியுள்ளார். ஆனந்தன் 16-ம் நான் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. விருகை ரவி பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் மாதம், சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியில் ரவுடிகள் தகராறு செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற முதல்நிலைக் காவலர் ராஜவேலு கடுமையாக தாக்கப்பட்டார். சுமார் 10 பேர் கொண்ட கும்பல் வெட்டியதில் தலை உள்பட 16 இடங்களில் காயமடைந்த ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ரவுடி ஆனந்தனை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், மத்திய கைலாஷ் பகுதியில் ஆனந்தன் உள்ளிட்டோர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து உதவி ஆணையர் சுதர்சன் தலைமையில் தனிப்படை காவலர்கள் அப்பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது, ஆனந்தன் மீண்டும் போலீசாரை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உதவி ஆணையர் துப்பாக்கியால் சுட்டதால் ரவுடி ஆனந்தன் அங்கேயே இறந்தான்.
கொல்லப்பட்ட ஆனந்தன் மீது வழிப்பறி, கொலை உள்பட 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. என்கவுன்டர் தொடர்பாக நீதிபதி உரிய விசாரணை நடத்துவார் என காவல்துறை இணை ஆணையர் அன்பு தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்திற்கு எம்.எல்.ஏ. ரவி அஞ்சலி செலுத்தியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனந்தனின் 16ம் நான் நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ. விருகை ரவி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி இருக்கிறார். விருகை ரவிக்கு பல்வேறு வகையில் ஆனந்தன் துணையாக இருந்ததாக தகவல் வந்துள்ளது.