தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு: டிடிவி தினகரன் இல்லத்தில் முக்கிய ஆலோசனை

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வருகிற தீர்ப்பு தமிழக அரசியலில் முக்கியத் திருப்பங்களை உருவாக்கும்.

டிடிவி தினகரன் இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கூடுகிறார்கள். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கிறார்கள்.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேரும் அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் இன்று பிறபகல் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வருகிற தீர்ப்பு தமிழக அரசியலில் முக்கியத் திருப்பங்களை உருவாக்கும் எனத் தெரிகிறது. சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம். சபாநாயகர் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால், அடுத்த 6 மாதங்களில் மேற்படி 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆர்.கே.நகர் தோல்வியைத் தொடர்ந்து இடைத்தேர்தலை சந்திக்கும் மனநிலையில் ஆளும்கட்சியினர் இல்லை. ஒருவேளை 18 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து எதிர்க்கட்சிகள் ஜெயித்துவிட்டால், அதுவும் ஆட்சியின் மெஜாரிட்டியை பாதிக்கும். எனவே தமிழக அரசியல் க்ளைமாக்ஸை நோக்கி நகர்கிறது.

இந்தச் சூழலில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரையும் இன்று (ஜூன் 14) காலை டிடிவி தினகரன் தனது பெசன்ட் நகர் இல்லத்திற்கு அழைத்தார். அதைத் தொடர்ந்து அரூர் முருகன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் காலை 10 மணிக்கு வந்தனர். தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இதர எம்.எல்.ஏ.க்களும் வந்தபடி இருக்கிறார்கள்.

இன்று பிற்பகல் வரவிருக்கும் தீர்ப்பை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் அல்லாத கட்சியின் சீனியர்களும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.

 

×Close
×Close