/indian-express-tamil/media/media_files/2025/04/07/3KGl9k2uVrQ6qwDHlfce.jpg)
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 7) நடைபெற்ற அமர்வில், 'அந்த தியாகி யார்?' என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்த அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இன்றைய தினம் (ஏப்ரல் 7) சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொள்ள வந்திருந்த அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், 'அந்த தியாகி யார்?' என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்திருந்தனர்.
முன்னதாக, கடந்த மாதம் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் முடிவில் ஏறத்தாழ ரூ. 1000 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றது என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது.
அதில், "டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் ரூ. 1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுபானம் கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும், விற்பனை புள்ளி விவரங்களை உயர்த்தியும் முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேட்டில் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பிற முக்கிய கூட்டாளிகள் பங்கு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தத்தில் முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இல்லாத நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் உயர் அதிகாரிகள், மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. முறையான விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு, முறையான கே.ஒய்.சி, பான் விவரங்கள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கூட பார் உரிம டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்து, கட்டட உள்கட்டமைப்பு ஆகியவற்றிலும் ஊழல் நடந்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் முறைகேடு குறித்து பல்வேறு கட்சியினரும் கேள்வி எழுப்பி தங்கள் கருத்தை பதிவு செய்தனர். குறிப்பாக, பல்வேறு போராட்டங்களை பா.ஜ.க முன்னெடுத்தது. அ.தி.மு.க மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் கலந்து கொண்ட அ.தி.மு.க உறுப்பினர்கள், டாஸ்மாக் முறைகேடு குறித்து கவனம் ஈர்க்கும் விதமாக 'அந்த தியாகி யார்?' என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்திருந்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை முன்வைத்தார். ஆனால், டாஸ்மாக் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பேரவையில் விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சட்டப்பேரவையில் இருந்து அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், அவர்களை இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
முன்னதாக, 'அந்த தியாகி யார்?' என்று சட்டப்பேரவையில் அ.தி.மு.க-வினர் கேள்வி எழுப்பினர். அதற்கு, "நொந்து நூடுல்ஸ் ஆகிப் போன அ.தி.மு.க தொண்டர்கள் தான் தியாகி" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க-வினர் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் மட்டும் வெளியேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.