தமிழகத்தில் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவுக்கு பிறகு, மேகாலயா மாநிலத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் நிரந்தர ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் நேற்று கோவையில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீரென ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த திடீர் நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆளுநரின் ஆய்வு நடவடிக்கை அதிர்ச்சி அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் இதுவரை தலையிட்டது இல்லை என்றும் அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதற்கு பதிலளித்த பாஜக, வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் ஆலோசனை செய்ய அதிகாரமே இல்லை என்று கூறிவிட முடியாது, அதிகாரத்திற்கு உட்பட்டுதான் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்பது கவர்னருக்கு தெரியும் என்றது.
மேலும், கோவையை தொடர்ந்து மற்ற மாவட்டங்களுக்கும் செல்வேன் என ஆளுநர் பன்வாரிலால் இன்று கூறியுள்ளார். ஆளுநரின் செயல்பாடுகளில் தவறு இல்லை என தமிழக அமைச்சர்கள் கூறியுள்ள நிலையில், அ.தி.மு.க எம்.பி அன்வர் ராஜா இதனை கடுமையாக எதிர்த்துள்ளார்.
ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளதாக கூறிய அவர், ஜெயலலிதா இருந்திருந்தால் ஆளுநர் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இருக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆளுநர்களை வைத்து ஆட்சி செய்ய மத்திய அரசு முயன்று வருவதாக அன்வர் ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.