சென்னையில் அதிமுக எம்பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடர் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்க உள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்களோடு பல்கலைக்கழக மானியக்குழுவை கலந்து புதிய அமைப்பை ஏற்படுத்தும் யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து அதிமுக எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், எம்.பி.க்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும், யுஜிசி மசோதா மற்றும் அணை பாதுகாப்பு மசோதா ஆகியவற்றை எதிர்க்குமாறு எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "மாநில உரிமைகளை பாதுகாக்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும். மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது" என்று அவர் தெரிவித்தார்.
அதிமுக எம்பிகள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், விரைவில் அதிமுக செயற்குழுவை கூட்டுவது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.