News J Channel : அதிமுக-வின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலான நியூஸ் ஜெ தொலைக்காட்சி நேற்று முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று தொடக்கி வைத்தார்கள்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக வில் ஏற்பட்ட பல சிக்கலின் காரணமாக அக்கட்சியின் அப்போதைய அதிகாரப்பூர்வ சேனலாக இருந்த ஜெயா டிவி சேனல், டிடிவி தினகரன் தரப்பினரால் கைப்பற்றப்பட்டது. அதன் விளைவாக அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சேனலாகவோ கட்சியின் செய்திகளை வெளியிடும் சேனல் என்று எதுவும் இல்லாமல் போனது.
News J Channel : நியூஸ் ஜெ சேனல் தொடக்கம்
இதன் காரணமாக தமிழக அரசு ஆட்சி நடத்தி வரும் அதிமுக-வின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் அதிகாரப்பூர்வ சேனல் ஒன்றை தொடக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 24–ந்தேதி ஜெயலலிதாவின் 70 பிறந்த நாளையொட்டி, அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக-வின் அதிகாரபூர்வ ஏடாக, ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ என்ற நாளேட்டை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டார்கள்.
மேலும் கடந்த செப்டம்பர் 12–ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ, இணையதளம் மற்றும் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
November 2018
இந்நிலையில், தற்போது அதிமுக அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியாக நியூஸ் ஜெ தொலைக்காட்சி துவக்க விழா நேற்று மாலை 5 மணி அளவில் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்று புதிய சேனலை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியல் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, செய்தித்துறை மற்றும் பத்திரிக்கையாளர்களின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். பின்னர் அரசின் திட்டங்கள் மற்றும் அதன் நன்மைகள் பற்றிய செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க இது உதவியாக இருக்கும் என்று கூறினார். இறுதியாக உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடக்கூடாது என்பதில் இந்த சேனல் உறுதியாக இருக்கும் என்றும் கட்டளையாகத் தெரிவித்தார்.