Advertisment

அதிமுகவில் முக்கிய அதிகார பகிர்வு: அறிக்கை விடுவதில் இபிஎஸ்- ஓபிஎஸ் சமரசம்

மீண்டும் அதிமுக வில் ஏற்பட்டிருக்கும் அதிகார மோதல்களால் கட்சி சிதைந்து விடாமல் இருப்பதற்காக கட்சிக்குள்ளேயே வெளி வராத ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

author-image
WebDesk
New Update
அதிமுகவில் முக்கிய அதிகார பகிர்வு: அறிக்கை விடுவதில் இபிஎஸ்- ஓபிஎஸ் சமரசம்

ADMK OPS EPS Letter Pad Issue News in Tamil : எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஏற்பட்ட உள்கட்சி சலசலப்புகளையும், ஜெ, ஜா என பிளவுப்பட்டிருந்த அதிமுக வின் இரு அணிகளையும் தேர்தல் முடிவுகள் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்து, அதிமுக வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா உருவெடுத்தார். தற்போது, ஜெயலலிதா மறைவுற்று நான்கு ஆண்டுகளை கடந்த நிலையிலும், அதிமுக தலைமைப் பொறுப்பேற்பதில் உள்ள சிக்கல் இன்றளவிலும் நீடித்து வருகிறது.

Advertisment

எதிர்பாராத விதமாக சசிகலா வின் வழிகாட்டுதலின் பேரில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி. இருப்பினும், ஜெயலலிதா கால கட்டத்திலேயே முதல்வராக பதவி வகித்து, ஜெயலலிதாவுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் விசுவாசமாக திகழ்ந்தவர் பன்னீர்செல்வம். சசிகலா - தினகரன், ஓபிஎஸ், ஈபிஎஸ். தீபா தலைமை என பல கூறுகளாக அதிமுக சிதைவுற்று, இறுதியாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணைவு பெற்றும், தினகரன் தலைமையிலான அணி அமமுக எனும் புதிய கட்சியாகவும் உருவெடுத்தது.

ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைவின் போது, கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரம் செலுத்துவது யார் என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன் படி, ஆட்சி அதிகாரத்தை முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சராக பன்னீர் செல்வமும் பங்கு போட்டு கொண்டனர். ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுத்த நிலையில், கட்சித் தலைமையை விட்டுக் கொடுக்க இயலாது என பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் முரண்டு பிடிக்க, சுமூகமாக பிரச்னையை கையாளுவதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் உருவாக்கப்பட்டன. ஓபிஎஸ் தரப்பு அழுத்தத்தின் காரணமாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், ஜெயலலிதா கட்டுக்கோப்புடன் வழிநடத்தி விட்டு சென்ற இயக்கத்தை, இதற்கு மேலும் சிதைவடையாமல் தடுப்பதற்காகவும் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஈபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் கைவசம் அழித்தது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் ஆட்சி அதிகாரமும், கட்சி அதிகாரமும் ஒருவரிடமே இருந்து வந்த நிலையில், அதிமுக நிர்வாகப் பொறுப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக முன்னிருந்திக் கொள்ள ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு முட்டி மோதிக் கொண்டன. இறுதியாக, கட்சிக்குள் தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளரானார். தேர்தல் தோல்விக்கு பிறகாக, பழனிச்சாமியால் தான் இந்த தோல்வி என்ற பேச்சினை பன்னீர் தரப்பு முன்வைக்க, சுமார் 60 இடங்களில் வெற்றியை தேடி தந்து வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக வை முன்னிருந்தியது நான் தான் என பழனிச்சாமி கொக்கரிக்க, மீண்டும் அதிமுக விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

தேர்தலுக்கு பிறகாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு பன்னீரும், பழனிச்சாமியும் நேரடியாக முட்டி மோதிக் கொண்டனர். இறுதியாக, அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார். தேர்தலுக்கு பிறகாக, அதிமுக வின் தலைமையாக பழனிச்சாமி உருவெடுத்துள்ளார் என்ற சர்ச்சை பேச்சுகளுக்கு முடிவு கட்டும் விதமாக, பன்னீர்செல்வம் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள பல முயற்சிகளை கையாண்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக அதிமுக சார்பாக வெளியிடப்படும் அறிக்கைகளின் வாயிலாக, அதிமுக வின் உள்கட்சி பூசல்கள் வெளிவந்துள்ளன.

அதிமுக வின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேட்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என எடப்பாடியும், பன்னீரும் சேர்ந்து கையெழுத்திட்டு அறிக்கைகள் வெளி வந்தது. கடந்த சில தினங்களாக அதிகாரப் போட்டியின் உச்சமாக கட்சி லெட்டர் பேட் அல்லாது, தங்களுக்கென தனியாக உள்ள லெட்டர் பேட்களிலேயே அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். இந்த நிலையில், மீண்டும் அதிமுக வில் ஏற்பட்டிருக்கும் அதிகார மோதல்களால் கட்சி சிதைந்து விடாமல் இருப்பதற்காக கட்சிக்குள்ளேயே வெளி வராத ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிரச்னை சுமூகமாக முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.

அதன் படி, எதிர்க்கட்சித் தலைவருக்கான லெட்டர் பேடில் எடப்பாடி பழனிச்சாமியும், கட்சி சார்ந்த அறிவிப்புகளை பன்னீர்செல்வமும் வெளியிடுவார்கள் என சமரசம் எட்டப்பட்டிருப்பதாக தெரிய வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இன்று காலை பன்னீர்செல்வம் மின்வாரிய ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வெளியிட்ட அறிக்கையில் ஒருங்கிணைப்பாளரான அவர் மட்டுமே கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வின் அதிகார பகிர்வு, ஒப்பந்தங்களுடன் சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ops Eps Admk Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment