அதிமுக செயல்பாடுகளில் ஓ.பி.எஸ்-ஐ கலந்து ஆலோசிக்க வில்லையா? நெல்லையில் ஷாக் போஸ்டர்

அதிமுக தொண்டர்கள் என்ற முகவரியோடு நெல்லையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர், அதிமுக வில் மீண்டும் சச்சரவுகளுக்கு அடித்தளமிட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகாக அதிமுக சந்திக்காத பிரச்னைகளே இல்லை. ஜெ மறைவினை அடுத்து, அதிகாரத்திற்கான மோதல்களால் அதிமுக பல கூறுகளாக சிதைந்து போனது நாம் அறிந்ததே. பல களேபரங்களுக்கு முடிவு கட்டும் விதமாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணி இணைப்பு சாத்தியமாக, சசிகலாவும் தினகரனும் ஓரங்கட்டப்பட்டார்கள். ஒரு வழியாக ஜெயலலிதா விட்டுச் சென்ற 4 ஆண்டு ஆட்சியை போர் சூழலிலேயே முடிவு செய்து, தேர்தல் தோல்வியால் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையை அதிமுக அடைந்துள்ளது.

இருப்பினும், அதிமுக வில் ஒற்றைத் தலைமை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி, சசிகலாவுக்கு பன்னீர்செல்வத்தின் ஆதரவு நிலை, சசிகலாவின் அரசியல் ரீ எண்ட்ரி, கொறடா பதவிக்கு மனோஜ் பாண்டியன் என அவ்வப்போது பூதாகரமாகும் சலசலப்புகள், அதிமுக வின் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளன. வெளிப்படையாக அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு சமரசத்தில் ஈடுபட்டாலும், மறைமுகமாக பெரும் அதிர்வலைகளை அதிமுக வில் ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி, 9 மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடியின் இந்த செயல், பன்னீர்செல்வம் தரப்பில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதன் பிறகு, தனியார் ஹோட்டலில் பன்னீர்செல்வத்தை சந்தித்த எடப்பாடி, சமரசம் செய்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி, அதிமுக கொறடா என முக்கிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்வு நடைபெற உள்ளது. நிர்வாகிகள் நியமனம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு நடைபெற்றாலும், எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களை திரட்டி அந்த பதவிகளுக்கான நிர்வாகிகள் சிலரை செலக்‌ஷன் லிஸ்டில் வைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், கட்சி நிர்வாகப் பொறுப்புகளில் ஒருங்கிணைபாளர் பதவியில் இருப்பவரே அதிகாரமிக்கவராக கருதப்படும் சூழலில், பன்னீர்செல்வம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தென் மாவட்ட அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த சூழலில், நெல்லை மாவட்டத்தின் மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்களால் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் அரசியல் கவனம் பெற்றுள்ளது. அந்த போஸ்டரில், ‘அதிமுக கட்சி செயல்பாடுகளில் ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட பன்னீர்செல்வத்திடம் கலந்தாலோசிக்காமல் எந்த விதமான செயல்பாடுகளிலோ, நடவடிக்கைகளிலோ ஈடுபட்டால் அதிமுக தலைமையை முற்றுகையிடுவோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இவ்வாறு செய்ததால் தான், தேர்தலில் தோற்றுப் போனோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள பரபரப்பு போஸ்டர்

நெல்லையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், சில நுணிக்களையும் உற்று நோக்க வேண்டியுள்ளது. பன்னீருக்கு எதிராக எடப்பாடி செயல்படுகிறார் என்ற வகையில் வசனங்கள் இடம்பெறவில்லை.. இருப்பினும், எடப்பாடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், அதிமுக தொண்டர்கள் என்ற முகவரியோடு நெல்லையில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் அதிமுக வில் மீண்டும் சச்சரவுகளுக்கு அடித்தளமிட்டுள்ளது. இருப்பினும், சசிகலாவின் அரசியல் ரீ எண்ட்ரிக்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஈபிஎஸ்-ஓபிஎஸ் என இரு தரப்பையும் ஒற்றை போஸ்டர் உற்றுநோக்க வைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Admk ops eps sasikala tirunelveli shocking poster cadre reaction

Next Story
சமரசம் ஆனாரா ஓ.பி.எஸ்? அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின் அஜெண்டா என்ன?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com